Search The Blog

பகவத் கீதை

பகவத் கீதை (சமக்கிருதம் Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.

இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது

பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும், குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்தநூலாக உள்ளது. இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.

பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை மூன்று பகுதிகளாக (ஷட்கம்) பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் ஆறு அத்தியாயங்கள் கொண்டுள்ளது. முதல் பகுதியில் (1 முதல் 6 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவனின் தத்துவம், கர்ம யோகம் மற்றும் சுயமுயற்சி குறித்து விளக்கப்படுகிறது. இரண்டாம் பகுதியில் (7 முதல் 12 வரை உள்ள அத்தியாயங்கள்) ஈஸ்வர தத்துவம், பக்தி யோகம் மற்றும் ஈஸ்வர அனுக்கிரகம் குறித்து விளக்கப்படுகிறது. மூன்றாம் பகுதியில் (13 முதல் 18 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவ-ஈஸ்வர ஐக்கியம் (சீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற அத்வைத ஞானம்), ஞான யோகம் மற்றும் நற்பண்புகள் குறித்து விளக்கப்படுகிறது.

ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் போன்றவை பகவத் கீதை உரைகளாகும்.

கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.

          வேதாந்தப் பார்வை
          சுயதருமப் பார்வை
          கர்ம யோகப் பார்வை
          பக்தி யோகப் பார்வை
          ஞான யோகப் பார்வை

உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்

குருஷேத்திர இறுதிப் போருக்கு முன்னர், போரிட மறுத்த அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த அறிவுரைகளே கீதை ஆகும். கீதைக்கு மூலம் மகாபாரதமே.

பகவத் கீதை 18 பகுதிகளில் 700 சுலோகங்களைக் கொண்டதாகும். {சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு} ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும். எனவே ஒவ்வொரு பகுதியும் முற்றான உண்மையை உணர்வதற்காக வெளிப்படுத்தப்படும் மிகச் சிறப்பான அறிவாகும் என்பதையே அஃது உணர்த்துகிறது.

பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.

குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

குருச்சேத்திரப் போர் நடந்த காலம்

குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, புராண இலக்கியங்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். கடலில் மூழ்கிய துவாரகை நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், துவாரகை கி.மு 1500 ல் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

அர்ஜுனனின் தயக்கம்

குருக்ஷேத்திரப் போர் நடக்கும் சமயத்தில் கௌரவ- பாண்டவ சேனைகள் அணிவகுத்து நிற்கின்றன. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனின் ரதத்தை செலுத்துகிறார் பாண்டவர்களில் வல்லமை மிகுந்தவன் அர்ஜுனன். அவனிடம், ஸ்ரீராமனின் கோதண்டத்துக்குச் சமமான காண்டீபம் எனும் வில் இருந்தது. தவங்கள் பல புரிந்து பிரம்மாஸ்திரம், வருணாஸ்திரம் போன்ற எண்ணற்ற அஸ்திரங்களைப் பெற்றிருந்தான் அவர். தர்மத்தைக் காக்க தன் உயிரைக் கொடுக் கவும் தயாரானவன் அவர். எல்லாவற்றுக்கும் மேலாக, பகவான் ஸ்ரீகிருஷ்ணரே தேரோட்டியாக அவர்டோன் இருந்தார். ஆனால், யுத்தம் ஆரம்பமாகும் முன், திடீரென கோழையைப் போன்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் அர்ஜுனன். வேரற்ற மரம் போல், ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து புலம்பினார்.

"இந்த யுத்தம் வேண்டாம்... உற்றார் உறவினர்களைக் கொன்று குவித்துப் பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். குல தர்மத்தை மீறி பெரியோர்களைக் கொல்வது பாபமாகிவிடும். இதனால் ஏற்படும் புகழும் பெயரும் எனக்குத் தேவையில்லை. இந்த இழிசெயலைச் செய்ய எனக்குப் பயமாக இருக்கிறது" என்று கிருஷ்ணரிடம் புலம்பபினார்.

இந்த சூழ்நிலையில் பகவானின் உபதேசத்தைப் பெற வேண்டிய அர்ஜுனன், அவருக்கே உபதேசம் செய்து கொண்டு இருந்தார். இதனால் பகவத் கீதையின் முதல் அத்தியாயத்துக்கு ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்று பெயர். இரண்டாம் அத்தியாம் "ஸாங்கிய யோகம்" ஆகும். இந்த பயத்தைப் போக்கவே, பகவான் ஆத்ம போதத்தை உபதேசித்தார்.

”உடல்கள் அழியலாம்; ஆத்மா அழியாது. அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மா இறவாதது, பிறவாதது, வளராதது, கொல்லப்படாதது, என்றும் குறையாதது. உடலானது, ஓர் ஆடையை மாற்றி மற்றொன்றை அணிவது போன்று, ஆத்மா தன் உடலை மாற்றிக்கொள்ளவல்லது." என்று ஸ்ரீ கிருஷ்ணன் தன உபதேசத்தை தொடங்கினார்.

(கீதை தொடரும் ...)

சமூக நாடகம்

சமூக நாடக வரலாறு:

தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் நாடகங்கள் தோன்றிய வரலாற்றை பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதில் மேடை நாடகங்களும் படிக்கும் நாடகங்களும் உருவாயின.அப்போது மக்களிடம் சமயவுணர்வு ஓங்கியிருந்தது. அதனால் நாடகங்கள் பெரும்பாலும் புராண இதிகாசக் கருத்துகளையே கொண்டிருந்தன. தெருக்கூத்தின் மூலம் மக்கள் அறிந்திருந்த கதைகளே நாடகங்களாகத் தரப்பட்டன. அதிலும் பாடலுடன் கூடிய நாடகங்களையே மக்கள் பார்க்க விரும்பினர். சமூக உணர்வு முளைவிடத் தொடங்கியதன் அடையாளமாகச் சில சமூக நாடகங்களும் உருவாயின. விலாச நாடகங்கள் என்ற பெயரில் நாடகங்கள் நடத்தப்பட்டன. பாட்டு வசனம் முதலானவை சம அளவில் இடம்பெறும் வகையில் நாடகங்கள் உருவாக்கப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டு
நாடகம் பொழுதுபோக்கிற்கு மட்டுமன்றிச் சமூகத்திற்கு உதவுவதும் ஆகும் என்ற உணர்வு சமூக நாடகங்களின் வளர்ச்சிக்கு வழிகோலியது. சமூக நாவல்கள் பல, சமூக நாடகங்களாக ஆக்கப்பட்டன. தேசிய உணர்வு முளைவிட்டு அது பரப்பப்பட வேண்டிய சூழலில் சமூக நாடகங்கள் மேலும் வளர்ச்சி பெற்றன. அத்துடன் புராண இதிகாச நாடகங்களிலும் கூடச் சமூகக் கருத்துகள் ஊடாடின. சமூக நாடகங்கள் பெருகின.

விடுதலைக்குப் பின் சமூக நாடகங்கள், மேலும் பெருகின. சமுதாயம் பற்றிய பொதுவான கருத்துகள் நாடகங்களில் இடம் பெற்றன; நடுத்தர வர்க்கத்தினரின் சிக்கல்கள் வெளியிடப்பட்டன. தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்கள் பேசப்பட்டன; சமூகச் சீர்கேடுகளான சாதிச் சிக்கல்கள் சாடப்பட்டன. கலப்பு மணம், பெண் முன்னேற்றம், தலைமுறை இடைவெளி, மக்களாட்சியின் குறைகள் எனப் பல செய்திகள் நாடகங்கள் வாயிலாகப் சொல்லப்பட்டது. எளிய மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் சொல்லப்பட்டது. மனித இன ஏற்றத் தாழ்வு, மனித உரிமை பாதிப்பு, அரசியல்வாதிகளின் ஒழுக்கக் கேடு, பொருளியல் சீர்கேடு, வேலையில்லாத் திண்டாட்டம், புரட்சி உணர்வு முதலானவற்றைக் காட்டுகிற நவீன நாடகங்கள் உருவாக்கப்பட்டன என்றால் மிகையாகாது.

நாடக இலக்கியம்


நாடக கலையை தான் கலைகளின் அரசி என்பர். தமிழ் மொழியில் கலைகள் இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டு உள்ளது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்தது எனலாம். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்று உள்ளது என்றால் அது மிகையாகது

நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்று தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் நாடகத் தோற்றம்


மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே


கூத்தநூல்

இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.

நாடக வகைகள்


நாடக வகைகளை சற்று ஆராய்வோம்

      சமூக நாடகங்கள்
      புராண இதிகாச நாடகங்கள்
      வரலாற்று நாடகங்கள்
       இலக்கிய வடிவ நாடகங்கள்
      வாழ்க்கை வரலாற்று நாடகங்கள்
      அரசியல் நாடகங்கள்
      நகைச்சுவை நாடகங்கள்
      துப்பறியும் நாடகங்கள்
      மொழி பெயர்ப்பு நாடகங்கள்

இராமாயணம்

இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைக என்ன என்ன என்பதையும் , சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் கதையின் மூலம் விளக்கப்படுகின்றது இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது..

Read more

இதிகாசம்

இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும். இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும். (‘இது இப்படி நடந்தது’ எனவும் வேறு சிலர் ‘இப்படி நடந்தது என்ன ஆச்சரியம்’ எனவும் பொருள் கொள்வர்.)

இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதிகாசங்கள் ஒரு தோழனை போல மக்களை ஒரு சமய நெறிகள் நடத்துவதனால் “சம்ஹிதம்” எனப்படுகின்றன. இதிகாசம் என்ற தொகுதியில் சிவரகசியம் , மகாபாரதம், ராமாயணம் ஆகிய மூன்றும் அடங்கும். இவற்றில் சிவரகசியம் மேலானதாகையால் “பரமேதிகாசம்” எனப்படும். இது இன்று வழக்கில் இல்லை.

நில உடமைச் சமுதாயம் ஒரு காலகட்டம் வரை இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறி செல்லும்போது அதன் பரிணாமங்கள், நிகழ்வுகள், மாறுதல்கள்,அனைத்தும் வாய்மொழியாக ஒருகாலகட்டம் வரையிலும் குருவின் மூலமாக சீடர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டு, செவி வழிச் செய்தியாக சில காலம் வரையிலும் இருந்து சமுதாய பரிணாம வளர்ச்சியை தனதாக்கிக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகள் கால ஓட்டத்தையும், அதன் சமூக நியதிகளை இதிலிருந்து எடுத்து மேற்கோள்கள் காட்டிடவும், நீதி சொல்லவும், சமுதாய சட்டங்களாகவும் காலத்தை கடந்தும், தெளிவாகவும், எளிமையாகவும், சிக்கலான, நெருடலான, மனிதகுலச் சிந்தனைகளை உள்வாங்கி, உயர்ந்து நிற்கிற வரலாற்றுப் பெட்டகமே இதிகாசமாகும்.

இதிகாசம்