Search The Blog

இலக்கிய வடிவ நாடகங்கள்


சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் காணப்பெறும் சிற்சில கதாபாத்திரங்களையும், குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளையும் மையப் பொருளாகக் கொண்டு புனையப்பெறுவன இவ்வகை நாடகங்கள் ஆகும். இவற்றில் தலைமைப் பாத்திரங்கள் செந்தமிழ் நடையிலும், சராசரிக் குடிமக்கள் பாத்திரங்கள் வழக்குத்தமிழ் நடையிலும் வசனம் பேசுதலாக அமைப்பது இயல்பு. இவற்றைக் கவிதையில் அமைப்பதும் உண்டு. உரைநடையில் அமைப்பதும் உண்டு. பாரதிதாசனின் பிசிராந்தையார், சேரதாண்டவம், வ.சுப.மாணிக்கனாரின் மனைவியின் உரிமை (வள்ளல் பேகன் வரலாறு), புலவர் பழநியின் அனிச்ச அடி (பெண் கொலை புரிந்த நன்னன் கதை), மறைமலையடிகளின் அம்பிகாபதி அமராவதி, அ.ச.ஞானசம்பந்தனாரின் தெள்ளாறெறிந்த நந்தி போன்றன இவ்வகை நாடகங்களுக்குத் தக்க சான்றுகளாகும்.

தமிழ் நாடக வரலாற்றைப் பொறுத்தவரை பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகள் குறிப்பிடத்தக்க காலக்கட்டங்களாகும். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டிலிருந்துதான் நாடக இலக்கியங்கள் எழுத்து வடிவில் கிடைத்துள்ளன. மேலும் சோழர் காலத்தில் அரசர்கள் ஆதரவில் அரண்மனைகளிலும், கோயில்களிலும் அடைந்து கிடந்த நாடகக் கலை, மக்கள் மன்றங்களைத் தேடிவரத் தொடங்கியது. தெலுங்கு மற்றும் மராட்டிய அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தக் காலக்கட்டத்தில்தான், நாட்டுப்புற நிகழ்த்து கலைகளான பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், குளுவ நாடகம், மகுட நாடகம், கீர்த்தனை போன்ற நாடக வகைகள் வளர்ச்சி பெற்றன. இவ்வகை நாடகங்கள் தொன்மைத் தமிழ் நாடகப் போக்கில் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இனிக் காணலாம்.

பள்ளு நாடகம்
அரசர்களைப் பாடிக் கொண்டிருந்த காலம் மாறி, மக்களைப் பற்றிப் பாடும் காலம் வந்தது. அதனால் பலவகைப்பட்ட புதிய இலக்கியங்கள் பிறந்தன. கி.பி.பதினாறாம் நூற்றாண்டளவில் அவ்வாறு பிறந்ததுதான் பள்ளு நாடகம். மேடை வடிவமும், இலக்கிய வடிவமும் கொண்ட நிலையில் எழுந்த முதல் நாடக வகை பள்ளு. மருத நில மக்கள், பள்ளு நாடக உறுப்பினர்களாக வருகின்றனர். சிலப்பதிகாரம் போன்ற பண்டைய நூல்களில் உழவர்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து நாடக இலக்கிய வடிவில் பிற்காலப் புலவர்கள் உருவாக்கினர்.

திருவாரூர்ப் பள்ளு என்னும் பள்ளு நூல்தான் இவ்வகையில் முதலில் தோன்றியதாகும். கதிரைமலைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, வைசியப் பள்ளு எனப் பல குறிப்பிடத்தக்க பள்ளு நாடகங்கள் பின் தோன்றின.

பள்ளு நாடகங்களில் மிகச் செல்வாக்குப் பெற்றது முக்கூடற்பள்ளு ஆகும். இது கி.பி.1680இல் எழுந்தது. இப்பள்ளு, பிற்காலத்தில் பல பள்ளு நூல்கள் தோன்றுவதற்கு மூலநூலாக அமைந்தது எனலாம்.

‘பள்ளு நூல்கள், நாடக இலக்கியங்களாக அமைந்தவை. இவற்றை அப்படியே நடிக்க முடியாது. இவற்றில் நாடகப் பாங்கு அமைந்திருப்பதால் சில உத்திகளைச் சேர்த்து இவற்றை நடிப்பதற்கேற்ற வகையில் நாடகமாக்கும் முயற்சி பிற்காலத்தில் தோன்றியது’ என்பார் ஆறு. அழகப்பன்.

கதிரை மலைப் பள்ளு, முக்கூடற்பள்ளு இரண்டும் நாடகமாக நடிக்கப் பட்டவை. கதிரைமலைப் பள்ளின் மூல இலக்கியத்தை இலங்கை அறிஞர் க.வீரகத்தி என்பவர் நாடக வடிவில் இசைநாடகமாக்கி வெளியிட்டுள்ளார். அது இலங்கையில் பல இடங்களில் நாடகமாக நடிக்கப்பட்டுள்ளது. முக்கூடற் பள்ளு என்னாயினாப் புலவர் என்பவரால் நடித்தற்கேற்ற நாடகமாக எழுதப்பட்டது. மேடை நாடகமாகவும் நடிக்கப்பட்டது.

பள்ளு நாடகம் எளிய மக்கள் நடிப்பதற்கும், பார்ப்பதற்கும் தக்கதாக இருந்தது. நாட்டுப்புறக் கோயில் விழாக்களில் பாமர மக்களால் அதிகப் பொருள் செலவோ, அதிகப் பயிற்சியோ இன்றி எளிதாக நடிப்பதற்குத் தக்கதாய்ப் பள்ளு நாடகங்கள் இருந்தன. பள்ளு நாடகம் பார்த்து மக்கள் சொல்லையும், நெல்லையும் வளர்த்தார்கள் என்பார் ஏ.என்.பெருமாள்.

குறவஞ்சி நாடகம்
குறிஞ்சி நிலமாகிய மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறவர்கள். குறப்பெண்ணைக் குறவஞ்சி என்பர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று குறிசொல்லும் வழக்கமுடையவர்கள். சங்க இலக்கியங்களிலே வெறியறிதல் என்ற பகுதியிலேயே இச்செய்திகளைக் காணலாம். இவ்வாறு குறி சொல்லும் செய்தியை மையக்கருவாகக் கொண்டு தோன்றியதே குறவஞ்சி நாடகம். இதனைக் குறத்திபாட்டு எனவும், குறம் எனவும் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறும்.

குறவஞ்சி நாடகத்தில், இன்றைய நாடகங்களுக்கு இருப்பது போல் களம், காட்சி என்னும் பிரிவுகள் இல்லை. எனினும் அதனை மூன்று காட்சிகளாக மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு என்னும் தம்முடைய நூலில் பிரித்துக் காட்டுவார். குறத்தி வரும்வரை அமைந்துள்ள தலைவியினுடைய வரலாறு முதற்காட்சியாகவும், குறத்தி குறி கூறிப் பரிசில் பெற்றுச் செல்லுதல் இரண்டாவது காட்சியாகவும், சிங்கனின் பறவை வேட்டை முதல் சிங்கன் - சிங்கி உரையாடல் வரை உள்ள பகுதிகள் மூன்றாவது காட்சியாகவும் அவர் பகுப்பில் விளங்குகின்றன.

பாட்டுடைத் தலைவர் உலா பற்றிய அறிவிப்புடன் தொடங்கிய நாடகம், பாட்டுடைத் தலைவர் வாழ்த்துடன் முடிவு பெறுவது நாடகத்திற்கு ஓர் இயைபினை ஏற்படுத்துவதாக உள்ளது. குறவஞ்சியில் வரும் உரையாடல்கள், பேச்சு வழக்குச் சொற்களாகவும், மரபுத் தொடர், பழமொழிகள், சேரி வழக்குகள் கொண்டதாகவும் அமைகின்றன.

குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை குறமே குறவஞ்சி இலக்கிய வகையில் முதலில் தோன்றியதாகும்.

கிரேக்க மொழி நாடகங்களில், வசனப் பகுதிகள் மெல்ல நுழைந்தது போலவே, குறவஞ்சி நாடகங்களிலும் ஒரு செயற்பாட்டிற்கும், மற்றொரு செயற்பாட்டிற்கும் இடையே இணைப்புப் போல் விளங்குகின்ற வசனப் பகுதிகள் இடம் பெறலாயின. கும்பேசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திருமலையாண்டவர் குறவஞ்சி, ஓதாளர் குறவஞ்சி, சிதம்பரக் குறவஞ்சி முதலிய குறவஞ்சி நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

பள்ளு போன்றே அதன் பின் தோன்றிய குறவஞ்சி நாடகங்களும் மக்களைப் பாடின. குறவஞ்சி இலக்கியங்களில் பாட்டுகளை இணைக்கும் உரையாடல்கள் அதிகம் இடம் பெற்றன. இது இன்றைய நாடகத்தை நோக்கிய வளர்ச்சி எனலாம். பொதுவாகப் பள்ளு நாடகத்தைவிடக் குறவஞ்சி நாடகங்கள் அதிகமாக நடிக்கப்பட்டதோடு, வளர்ந்து வந்த போக்கினையும் காணமுடிகிறது.

நொண்டி நாடகம்
பள்ளு, குறவஞ்சி போலச் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வகையில் நொண்டி நாடகமும் ஒன்றாகும். இந்நாடகம் நொண்டிச் சிந்தால் பாடப்பட்டிருந்ததாலும், நொண்டி ஒருவன் தன் வரலாறு கூறுவதைப் போன்ற அமைப்பைப் பெற்றிருந்ததாலும் நொண்டி நாடகம் என்ற பெயர் வந்திருக்கலாம். ஒற்றைக்கால் நாடகம் என்று கிராமப்புற வழக்கில் இந்நாடகம் அழைக்கப்படுகிறது. இந்நாடக வகை 17ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும்.

ஒரு நடிகன் நொண்டியாக மக்கள் முன் தோன்றி, ஆடலும் பாடலும் மிகுந்த இவ்வகை நாடகங்களை நடித்துக் காட்டியிருக்கிறான். நகைச்சுவை மிகுந்த நாடகமாக நொண்டி நாடகம் விளங்குகிறது.

அக்காலச் சமுதாயத்தில் அதிகமாகக் காணப்பெற்ற பரத்தையர் உறவு, களவு போன்ற தீச்செயல்களை அரங்கத்தில் காட்டி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே நொண்டி நாடகத்தின் நோக்கமாகும். சிறப்பாக மக்களை மகிழ்வித்து, அறிவு புகட்ட வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

பல நொண்டி நாடகங்கள் அக்காலத்தில் அரங்கேறின. அவற்றில் சிறப்பானவை திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், திருமலை நொண்டி நாடகம், அவினாசி நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம் முதலியனவாகும். நொண்டி நாடகத்தில் முதலில் தோன்றியதாகச் சீதக்காதி நொண்டி நாடகத்தைக் குறிப்பிடலாம்.

ஒருவனே தோன்றி மேடையின் மீது பாடித் தன் வரலாறு கூறுவதாக அமையும் இந்நாடகத்தை ஒரு தனி நடிப்பு நாடகமாகக் கொள்ளலாம். இது குறவஞ்சி நாடகத்திலிருந்து இன்னும் சிறிது உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை உணர்த்துகிறது.

விலாச நாடகம்
விலாச நாடகம் என்பது பலவகை இலக்கியங்களின் சாயலையும் பெற்று விளங்கும் ஒரு சிற்றிலக்கிய வகை நாடகமாகும். கோவை, தூது போன்ற சிற்றிலக்கியங்களின் தாக்கம் அதிகமாக விலாச நாடகத்தில் உள்ளது. பெரும்பாலான விலாசங்கள், நாடகப் போக்கிலேயே அமைந்துள்ளன.

மேனாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி அங்கம், களம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ள விலாசங்களும் உண்டு. பல்வேறு வகையான இசைப் பாடல்களையும், விருத்தங்களையும் இடையிடையே வசனங்களையும் பெற்று அமைந்த விலாசங்களும் உண்டு. தெருக்கூத்தைப் போன்றே அமைந்துள்ள நாடக விலாசங்களும் உண்டு.

தமிழ் நாடக வரலாறு என்ற தன் நூலில் சக்திபெருமாள் கூறும் போது, “இந்நூற்றாண்டில் (கி.பி.19) நூற்றுக்கணக்கான நாடகங்கள் இயற்றப்பட்டு அவை புற்றீசல்கள் போலக் குறுகிய கால அளவே வாழ்ந்து மறையலாயின. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது தலைவியின் புகழைச் சிறப்பித்துப் பேசும் நாடகம் விலாசம் எனப்பட்டது. அரிச்சந்திர விலாசம், மோகனாங்கி விலாசம் என்பன அவ்வாறு பெயர் பெற்றவை” என்பார்.

சில விலாசங்களைப் படைத்த ஆசிரியர்களே தங்கள் நூல்களை நாடகங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பூம்பாவையார் விலாசம் என்ற நூல் இதற்குச் சான்றாகும்.

கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாவராததாள சிங்காராதி அபிநய தர்ப்பண விலாசம் என்னும் நூல், இசை, நாடகம் ஆகியவற்றை விளக்கும் நூலாகவே உள்ளது.

பூகோள விலாசம், அண்ட கோள விலாசம், அரிச்சந்திர விலாசம், மோகனாங்கி விலாசம், ஆறாதார விலாசம், சந்திர விலாசம், சமுத்திர விலாசம் எனப் பல விலாச நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன.

1877இல் திண்டிவனம் இராமசாமி ராசு என்பார் பிரதாப சந்திர விலாசம் என்னும் சமூக நாடகத்தைக் கவிதை, உரைநடை கலந்து அங்கம், களப் பிரிவுகளுடன் எழுதினார். அது முதல் தமிழ் நாடக உலகில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது.

1857இல் காசி விசுவநாத முதலியார் என்பவரால் இயற்றப்பட்ட நாடகம் டம்பாச்சாரி விலாசம். இது 19 ஆம் நூற்றாண்டில் அரங்கேறிய நாடகங்களிலே தலை சிறந்த நாடகம் என்று குறிக்கப்படுகின்றது. நாடக அமைப்பால் மட்டுமன்றிச் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டும் இந்நாடகம் முதலிடம் பெறுகின்றது.

இலக்கிய வகை நாடகங்களில் ஆரம்ப காலத்தில் பாடல்கள் மட்டும் இருந்தன. குறவஞ்சியில் இடையிடையே உரையாடல் இடம் பெற்றது. நொண்டி நாடகத்தில் தனி நடிப்பு வெளிப்பட்டது. விலாச நாடகக் காலத்தில் இறுதிப் பகுதியில் தமிழின் முதல் சமூக நாடகமாக விலாசமே (டம்பாச்சாரி விலாசம்) அமைந்தது. இதன் மூலம் தொன்மை நாடகத்தின் போக்கு பெரும் மாறுதலடைந்து அடுத்த காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

கீர்த்தனை நாடகம்
கி.பி.18ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலும் கீர்த்தனங்களாகிய இசைப் பாடல்களால் நாடகக் கூறுகள் மிக்க நாடகக் கீர்த்தனை இலக்கியங்கள் சில எழுதப்பட்டன. அவற்றின் கதைகள் பெரும்பாலும் இராமாயணம், பெரிய புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டதாகவே அமைந்தது.

நாடகக் கீர்த்தனை இலக்கியங்களுக்கு முன்னோடி சீர்காழி அருணாசலக் கவிராயர் 1771 இல் எழுதிய இராம நாடகக் கீர்த்தனை எனலாம். இந்நூலில் 16 இடங்களில் இந்நூலை நாடகம் என்றே ஆசிரியர் வழங்குகிறார். மேலும் ‘உனதாசையாலே நாடகமாகச் செய்தேன்’ என அபசார க்ஷமை என்ற பகுதியில் கூறுகிறார். நூற்பெருமை கூறும்போதும் ‘நாடகம் சொல்வேன்’ என்றும் கூறுகிறார். பாத்திரப் படைப்பு, கதைப் பின்னல், சுவை கூட்டல் ஆகியவை நாடகம் போன்று சிறப்பாக உள்ளன.

கோபால கிருஷ்ண பாரதியார் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படைத்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இதில் உரைநடைப் பகுதிகள் மிகுதி. இருசொல் அலங்காரம் என்னும் இருவர் மாறி மாறிப் பேசுவது என்ற முறையில் உரையாடலை அமைத்துள்ளார். அதனால் நாடக அமைப்புக்கு உகந்ததாக இக்கீர்த்தனை அமைகின்றது.

பொதுவாகக் கீர்த்தனை நாடகங்கள் தனி ஒருவராலேயே கதாகாலட்சேப முறையில் பாடி நடிக்கப் பெற்றன. இவை காலத்துக்கேற்ற முறையில் மாற்றங்களுடன் பாடப் பெற்றன.

சமூக நாடகங்களின் தொடக்கம்
டம்பாச்சாரி விலாசம், பிரதாப சந்திர விலாசம் போன்ற நாடகங்கள் தமிழ் நாடக உலகில் எவ்வாறு மாற்றம் ஏற்படுத்தியதோ, அதே போல் ஒரு மாற்றம் 1891 இல் ஏற்பட்டது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவ்வாண்டில் தான் மனோன்மணீயம் என்னும் நாடகத் தமிழ் நூலை முற்றிலும் செய்யுள் வடிவில் எழுதி முடித்தார். தமிழில் புதிய இலக்கியத்தின் தோற்றுவாய் இந்நூல் எனப் பலராலும் பாராட்டப்படுகிறது.

பிற்காலத்தில் பல நூல்கள் தோன்றுவதற்கு மனோன்மணீயம் வழிகாட்டியாய் அமைந்தது.

சுந்தரம் பிள்ளைக்குப் பின் 1896இல் பரிதிமாற் கலைஞர் இயற்றிய ரூபாவதி, கலாவதி ஆகிய செய்யுள் நாடகங்கள் வெளியாயின. நாடக இயல் என்னும் நாடக இலக்கண நூலையும் வெளியிட்டார்.

1889 இல் சீதா கல்யாணம் என்ற நாடகத்தை வேம்பம்மாள் என்ற பெண்மணி இயற்றினார். நாடக ஆசிரியர்களில் முதல் பெண்மணி இவரேயாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக