Search The Blog

புராண இலக்கியம்

புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.

இப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர் -அரக்கர்களின் போர்கள் போன்றவைகள் பலவற்றினையும் விவரிக்கின்றன.

புராணம் என்கிற சமஸ்கிருத சொல்லானது புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.

புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது சிவபுராணம். அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். சேக்கிழாரின் பெரியபுராணம் புகழ்பெற்றது.

Read more

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக