காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், காப்பியம் அதாவது சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர். அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.
தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடற்றிரட்டுக்களாகவே உள்ளன. மூன்று அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுக்களே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.
சங்கப் பாட்டுக்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புக்கள் உள. கதை தழுவிய நாடகங்கள் பல இருந்திருக்க வேண்டும். கதைகளும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ளவில்லை. கற்றறிந்த புலவோர் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம்கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.
'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு. பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான். பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர். தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.
Search The Blog
காப்பியம் இலக்கியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக