நாடக கலையை தான் கலைகளின் அரசி என்பர். தமிழ் மொழியில் கலைகள் இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டு உள்ளது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்தது எனலாம். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்று உள்ளது என்றால் அது மிகையாகது
நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்று தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது.
சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடகத் தோற்றம்
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
கூத்தநூல்
இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.
நாடக வகைகளை சற்று ஆராய்வோம்
சமூக நாடகங்கள்
புராண இதிகாச நாடகங்கள்
வரலாற்று நாடகங்கள்
இலக்கிய வடிவ நாடகங்கள்
வாழ்க்கை வரலாற்று நாடகங்கள்
அரசியல் நாடகங்கள்
நகைச்சுவை நாடகங்கள்
துப்பறியும் நாடகங்கள்
மொழி பெயர்ப்பு நாடகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக