Search The Blog

பக்தி இலக்கியம்

பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான் எனலாம்.ஆனாலும் சேர சோழ காலத்திலும் பக்தி இலக்கியம் பெரும் பங்கு வகித்து உள்ளது என்பது உண்மை. வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப் பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன. பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் காரணம் எனலாம். தமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் சைவம், வைணவம் என்னும் இரு கிளைகளாக பிரிந்து வளர்ந்தது.

சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. தமிழ்நாட்டில் செழித்திருந்த சமண பௌத்தங்களுக்கு எதிராகத் தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும் வைணவமும் பக்தி இயக்கத்தை தொடங்கியது என்றும் சொல்லலாம்.

சங்க காலத்து நுல்களை பார்க்கும் போது (இடையில் தோன்றிய சில நீதி நூல்களை தவிர )சங்க இலக்கியத்திலிருந்து பக்தி இலக்கியத்துக்கு இடையேயுள்ள வளர்ச்சியை நன்கு உணர முடிகிறது. பெயர் குறிப்பிடப்படாத கற்பனை மனிதர் இருவரின் காதலாக இருந்த பாட்டுகள் மாறி, தெய்வத்தின்மீது கொண்ட காதலைப் பாடும் பாட்டுகளாக வளர்ந்தன. அரசர்களின் வீரச் செயல்களைப் பாடும் நிலை மாறி, கடவுளின் அற்புத விளையாட்டுகளைப் பாடும் நிலை வளர்ந்தது, வள்ளல்களின் கொடையைப் பாடும் பாடல்களுக்கு ஈடாக, கடவுளின் அருட் செயல்களைப் பாடும் பாடல்கள் வளர்ந்தன. கற்பனைக் காதலுக்குப் பின்னணியாகப் பொதுவான இயற்கைச் சூழல் வருணிக்கப்பட்டிருந்தது மாறி, கடவுளிடம் செலுத்தும் பக்திக்குப் பின்னணியாகக் குறிப்பிட்ட ஊர்களின் (கோயில் தலங்களைச் சூழ்ந்த) இயற்கையழகைப் பற்றிய வருணனைகள் அமைந்தன. சங்க இலக்கியக் காதல் பாடல்கள் பலவற்றிலும் இயற்கை வருணனைகள் அமைந்தமை போலவே திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், திருமங்கையாழ்வார் முதலானவர்களின் பக்திப் பாடல்கள் பலவற்றிலும் சிறந்த இயற்கை வருணனைகள் அமைந்தமை காணலாம். இந்த உள்ளடக்க மாறுதலுக்குச் சமயங்கள் வழிவகுத்தன எனலாம்.

ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை; இல்லறம் வெறுக்கப்படவில்லை. நிலையாமை உணர்த்தப்படுகிறது. கலைகளும் போற்றப்படுகின்றன. இந்த உலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது. உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியுணர்ச்சியில் திளைத்திருக்க ஊக்கமூட்டுகிறது. “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்கிறது திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்திலுள்ள அறிவுரை.


சமணத்துறவியாக, துறவிகளின் தலைவராக இருந்து சைவ சமயத்திற்குத் திரும்பியவர் எனக் கூறப்படும் திருநாவுக்கரசர் பாடியுள்ள பின்வரும் பாடலில் இயற்கை தரும் இன்பங்களும் இயற்கையைப் பயன்படுத்திப் பெறும் இன்பங்களும் கலை இன்பங்களும் எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே என்ற உண்மை விளங்குகிறது.

                                     குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
                                     கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்
                                     பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
                                     பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
                                     ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
                                     உள்நின்ற நாவிற்கு உரையா டியாம்
                                     கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
                                     கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.

                (திருநாவுக்கரசர் தேவாரம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக