தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.
தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
அறிவியல் என்பது தனிப்பட்ட மனிதருக்கோ நாட்டிற்கோ உரியதன்று. அது உலகம் முழுமைக்கும் பொதுவானது. அறிவியலின் பயன்களைப் படித்தவர், படிக்காதவர் என்னும் வேற்றுமையின்றி அனைவரும் துய்க்கின்றனர். மெல்ல மெல்ல வேரூன்றிய அறிவியல் வளர்ச்சி இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் விரிந்து பரந்துள்ளது. அறிவியலுக்கு மொழிக் கட்டுப்பாடு இல்லை. அதன் எல்லையற்ற சாதனைகளுக்கு மொழி தடையாக இல்லாமல் கருவியாக மட்டுமே இயங்கி வந்துள்ளது. பல்வேறு தொடர்புக் கருவிகளால் சுருங்கிவிட்ட உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் புதுமைகளையும் பிற அறிவியல் சார்ந்த, சாராத உண்மைகளையும் ஒவ்வொருவரும், குறிப்பாக மாணவர்கள் அறிதல் இன்றியமையாதது. இந்த அறிவுப் புரட்சியில் மொழியும் தன்னை ஈடுபடுத்தி வளப்படுத்திக் கொள்வதால் பிற நாட்டவரோடு போட்டியிடும் தகுதியையும் பெறுகிறது.
உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டியுள்ள நமக்குத் தாய்மொழிவழிக் கல்வி பெரிதும் பயனளிக்கும். பிற மொழியில் பயிலும் போது, அம்மொழியின் கருத்துக்களைத் தம் மொழிக் குறிப்புகளாக மாற்றிச் சிந்திப்பதைத் தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தாய்மொழியில் பயின்று அதனால் கிடைக்கும் அறிவின் மூலம் விளையும் சிந்தனைகளே சிறப்பானவையாக விளங்கும் என்பதை வரலாற்று உண்மைகள் உணர்த்துகின்றன. வாழ்வியல், அறிவியல் ஆகிய இரு பெரும் பிரிவுகளிலும் இதற்கான சான்றுகள் மிகுந்துள்ளன. ஏட்டறிவு பெறாதோரும் தத்தம் மொழியில் வழங்கப்படும் பிற குறிப்புகளை எளிதில் புரிந்து கொள்கினறனர். எனவே, வாழ்க்கையோடு இணைந்துவிட்ட தாய்மொழியில் பயில்வதும், கற்பிப்பதும் சிறப்பான விளைவுகளை உண்டாக்கும் என்பது கண்கூடு. இவ்வுலகின் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சான்றாகக் கொண்டால் அந்நாடுகளிலெல்லாம் தாய் மொழிவழியே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப் பட்டு வருவதைக் காணலாம். இங்கிலாந்தின் ஆதிக்கம் உலகின் பல நாடுகளில் பரவியிருந்தமையால் அது மிகப்பெரும்பாலோரால் பேசப்படும் மொழியாகவும் இணைப்பு மொழியாகவும் உள்ளது. உலகக் கண்டுபிடிப்புகளின் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உடனடியாகக் கிடைக்கின்றன. பிற நாடுகளில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளை சீனாவில் அவர்கள் மொழியில் மொழிபெயர்த்துத் தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றம் செய்கின்றனர். இதனால் மொழி என்பது அறிவியலைப் பொருத்தவரை தொடர்பு ஊடகமாகவே செயல்படுகிறது. அந்தத் தொடர்பு ஊடகம் தாய்மொழியாக இருப்பின் கற்பதும் கற்பிப்பதும் எளிதாக அமையும்.
அடிப்படை அறிவியல் கருத்துகளைக் கொண்டு தன் முயற்சியால் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, வலுவான அடித்தளமும், தெளிவான சிந்தனையும் தேவை. சிந்தனயில் தெளிவு இல்லாவிடில் புதிய கருத்துகளை உருவாக்கவோ, செயல்படுத்தவோ இயலாது. பத்து பக்கப் பாடத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை 10 நிமிட செய்முறைப் பயிற்சி மூலம் அறிமுகப்படுத்திவிடலாம். ஏட்டளவில் உள்ள செய்திகளை நேருக்கு நேர் செய்முறைப் பயிற்சி அளிப்பதன் மூலம் மனதில் ஆழமாகப் பதியவைப்பதும், அந்தப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தாமே பிற பயிற்சிகளுக்கு முயலுவதும் ஆகும். இந்நிலையில் நூல் வழிக் கல்வி, அறிமுறைக்கல்வி ஆகியவற்றை நம் தாய் மொழியாம் தமிழ் வழியாகக் கற்பிப்பதால் மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் உயரும் எனலாம்.
தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்வியல், அறிவியல் பாடங்கள் தமிழ் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையில் கற்பிக்கப்படுகின்றன. அரசுக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வழங்கப்படுகின்றது. ஆனாலும் தாய்மொழிவழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மேல்நிலைப் பள்ளி வரையில் பெரும்பான்மையாக இருக்கும்போது உயர் கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் குறைவாகவே இருக்கின்றன. ஆங்கிலப் பயிற்று மொழி வழிப் பட்டத்தைப் பெறும் மாணவர்கள் ஆங்கிலத்திலோ பிற பாடத்திலோ தெளிவு பெற்றுள்ளனரா என்றால் அதுவுமில்லை. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் அங்கேயும் இங்கேயும் அரைகுறைதான். இது அறிவில் கூறுகளையும் கருத்துக்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் நெட்டுரு செய்வதனால் ஏற்படும் தேக்க நிலையாகும். இதனால் சிந்தனைத் தெளிவு ஏற்படாது. குறிப்பிட்ட பாடத்தின் உண்மைகளைப் பிழையறக் கற்றிருந்தால் மட்டுமே இதனைச் செய்ய இயலும். இயல்பாகவே வீட்டுமொழியாகவும், வாழ்க்கை மொழியாகவும் இருக்கும் தமிழ் வழிக் கல்வி விரைவாகப் புரிந்து கொள்வதற்கும் அதன்வழி சிந்திப்பதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன.
மேலும் ஒருவர் கல்லூரியில் படிக்கும் கல்விக்கும் அவர் பணியமர்த்தப்படும் வேலைக்கும் சிறிதும் தொடர்பிருப்பதில்லை. அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்று விட்டு வங்கி, பிற அரசு, தனியார் நிறுவனங்களில் எழுத்தர்களாகவும், தட்டச்சர்களாகவும் மேலாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். ஆகவே, அவர் அறிவியல் பாடத்தில் பெற்ற பயிற்சியும், கல்வியும் அவர் பட்டம் பெறுவதற்காகத் தனிப்பட்ட முறையில் செலவு செய்த பணமும், அவருக்காக அரசு செலவிட்ட பணமும் வீணாகின்றன. வங்கிகளில் பணியாற்ற அதற்கென பட்டப் படிப்புகள் தனியே உள்ளன. எனவே, வாழ்வியல், அறிவியல் பிரிவுகளில் பயில்வோருக்குமிடையே எந்த வேறுபாடும் இருப்பதில்லை. இதனைத் தவிர்க்க அறிவியல் சார்புடைய மிகுதியான நிறுவனங்களை அரசும், தனியாரும் நிறுவ வேண்டும். அறிவியல் ஆய்வுகள் பிறநாடுகளுடன் போட்டியிட்டு நடைபெறுவதற்கும், தமிழில் அறிவியல் பாடங்களை மாணவர்கள் கற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது அறிவியல் ஆய்வு இதழ்களை வெளியிடுதல், மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பொழுதுபோக்கு அறிவியல் படக் கதைப் புத்தகங்கள் வெளியிடுதல், அறிவியல் ஆண்டு விழா நடத்துதல், அறிவியல் மன்றங்கள் ஏற்படுத்துதல், ஒலி, ஒளி நாடகங்கள் மூலம் அறிவியல் கருத்துக்களைப் பரப்புதல் ஆகியன பெரிதும் துணைபுரியும். தற்போது பிற கலைத் தொடர்பாக வெளியிடப்படும், வார மாத இதழ்களை ஒப்பு நோக்கும் போது, அறிவியலில் வெளிவரும் இதழ்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஹெல்த் துளிர், விஞ்ஞானச்சுடர், கலைக்கதிர், கால்நடைக் கதிர், உங்கள் உடல்நலம், விஞ்ஞானச் சிறகு, வளரும் வேளாண்மை போன்ற குறிப்பிட்ட இதழ்களே அறிவியல் பரப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இவ்விதழ்களின் வாசகர்கள் மிகக் குறைவு. இவை போன்ற பிற அறிவியல் ஏடுகளை சேவையாகக் கருதி பல்கலைக் கழகங்கள் வெளியிட முன்வரவேண்டும். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் குறிப்பிட்ட அறிவியல் துறைகளில் ஆய்விதழ்களின் சுருக்கங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகின்றனர். இதே போல் அறிவியல் துறைகள் அனைத்திலும் நிகழும் செய்திகளை மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்கவும், அச் செய்திகளைப் பாதுகாக்கவும், ஒரு தனி அமைப்பை நிறுவ வேண்டியது மிக இன்றியமையாததாகும்.
ஜப்பான் உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த நாடுகளில், ஆங்கில மொழியில் வெளியான அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், தாய்மொழியில் மொழி பெயர்த்து ஆய்வாளர்களுக்கு வழங்கிவிடுகின்றனர். இதனால ஆய்வுத் தேக்கநிலை ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது. தமிழிலும் இவ்வாறு செய்யலாம். தொடக்கத்தில் கலைச்சொற்களை மொழிப்பெயர்ப்பதில் சிக்கல்கள் எழலாம். ஒவ்வொரு அறிவியல் பிரிவிற்கும் தனித்தனிக் குழுவினரை நியமதித்து, தற்போது வழக்கில் உள்ள சொற்களையும், புதிதாக உருவாக்கப்படும் சொற்களையும் ஆராய்ந்து ஏற்புடையவற்றை ஏற்று அவற்றையே அனைவரும் பயன்படுத்த ஆணையிட வேண்டும். தொடக்கத்தில் சில இடர்பாடுகள் நேரிடினும் நாளடைவில் சீரும் செம்மையும் பெற்றுவிடும்.
அரசு, எவ்வழி, மக்கள் அவ்வழி என்பார்கள். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து அறிவியல் பிரிவுகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக, பயிற்சி மொழியாகச் செயல்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும். இது எளிதில் இயலுமா என வினவுவோர்க்கு நாம் அளிக்கும் பதில் ‘ஆம் முடியும்’ என்பதே. ஒரு சிறிய உத்தரவின் மூலமே இம்மாபெரும் சீர்திருத்ததத்தைச் எளிதாக மேற்கொள்ள முடியும்.
தமிழ் வழியாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அறிவியல் பயிற்றுவிக்கப்படும்போது அதில் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு தேடிப் பிற இடங்களுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். உடனுக்குடன் கிடைக்கப் பெறயியலாத நிலையில் இவர்களின் அறிவு வளர்ச்சி பாதிக்கப்படும் எனச் சிலர் வாதிடுகின்றனர். இக்கூற்றில் உண்மை இருப்பதாகத் தோன்றவில்லை. ஏனெனில் நாம் ஆங்கிலத்தையோ, பிற மொழிகளையோ கற்பதைத் தடை செய்யவில்லை 'ஒரு மொழி என்ற அளவில்'. ஆனால் அதில் படித்தால் தான் நன்கு கற்க முடியும்; ஆராய இயலும் என்பதையே மறுக்கிறோம். மேற்சொன்ன கூற்றில் உண்மை இருக்குமெனில் நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் படித்தோரின் எண்ணிக்கைக்கும் இந்திய அறிவியல், பொருளாதார அறிவு ஆய்விற்கும் தொடர்பின்றிப் போகுமா? ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பட்டதாரிகளை உருவாக்கும் நாட்டில் ஏராளமான ஆய்வுகளும் போட்டியிடும் அளவுக்கு உண்டாயிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமையே வேறு. நாம் வெறும் பட்டதாரிகளை அதாவது தொடர்பில்லாத பணிக்குரிய கல்வியைத் தான் கற்றுக் கொடுத்து வருகிறோம். எனவே, கல்வியையும் வேலை வாய்ப்பினையும் தகுந்த முறையில் தொடர்பு படுத்த வேண்டும்.
இந்நாளில் கணிப்பொறி நுழையாத துறையே இல்லை எனலாம். எதிர்வரும் காலத்தில் கணிப்பொறி இல்லாமல் எந்தவொரு பிரிவும் செயல்பட இயலாத நிலைகூட ஏற்படலாம். கணிப்பொறியைப் பயன்படுத்தித் தமிழ் மொழி வழிக் கல்வியைக் குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில் முறையில் பாடங்களைப் படிப்பதற்கு மாணவர்களிடயே ஆர்வத்தை ஏற்படுத்த முறையான பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்த வேண்டும். தெளிவான தொலைநோக்கு, வலுவான அடிப்படைக் கல்வி, முறையான அறிமுறைப் பயிற்சி ஆகியவை மனித வள மேம்பாட்டிற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் சிறப்பாகத் தேவைப்படுவன. நர்சரிப் பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் பெருகிவரும் இந்நாளில் தமிழில் அறிவியல் உட்பட அனைத்தும் என்னும் முழக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
Search The Blog
அறிவியல் தமிழ் இலக்கியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக