Search The Blog

சமூக நாடகம்

சமூக நாடக வரலாறு:

தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் நாடகங்கள் தோன்றிய வரலாற்றை பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதில் மேடை நாடகங்களும் படிக்கும் நாடகங்களும் உருவாயின.அப்போது மக்களிடம் சமயவுணர்வு ஓங்கியிருந்தது. அதனால் நாடகங்கள் பெரும்பாலும் புராண இதிகாசக் கருத்துகளையே கொண்டிருந்தன. தெருக்கூத்தின் மூலம் மக்கள் அறிந்திருந்த கதைகளே நாடகங்களாகத் தரப்பட்டன. அதிலும் பாடலுடன் கூடிய நாடகங்களையே மக்கள் பார்க்க விரும்பினர். சமூக உணர்வு முளைவிடத் தொடங்கியதன் அடையாளமாகச் சில சமூக நாடகங்களும் உருவாயின. விலாச நாடகங்கள் என்ற பெயரில் நாடகங்கள் நடத்தப்பட்டன. பாட்டு வசனம் முதலானவை சம அளவில் இடம்பெறும் வகையில் நாடகங்கள் உருவாக்கப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டு
நாடகம் பொழுதுபோக்கிற்கு மட்டுமன்றிச் சமூகத்திற்கு உதவுவதும் ஆகும் என்ற உணர்வு சமூக நாடகங்களின் வளர்ச்சிக்கு வழிகோலியது. சமூக நாவல்கள் பல, சமூக நாடகங்களாக ஆக்கப்பட்டன. தேசிய உணர்வு முளைவிட்டு அது பரப்பப்பட வேண்டிய சூழலில் சமூக நாடகங்கள் மேலும் வளர்ச்சி பெற்றன. அத்துடன் புராண இதிகாச நாடகங்களிலும் கூடச் சமூகக் கருத்துகள் ஊடாடின. சமூக நாடகங்கள் பெருகின.

விடுதலைக்குப் பின் சமூக நாடகங்கள், மேலும் பெருகின. சமுதாயம் பற்றிய பொதுவான கருத்துகள் நாடகங்களில் இடம் பெற்றன; நடுத்தர வர்க்கத்தினரின் சிக்கல்கள் வெளியிடப்பட்டன. தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்கள் பேசப்பட்டன; சமூகச் சீர்கேடுகளான சாதிச் சிக்கல்கள் சாடப்பட்டன. கலப்பு மணம், பெண் முன்னேற்றம், தலைமுறை இடைவெளி, மக்களாட்சியின் குறைகள் எனப் பல செய்திகள் நாடகங்கள் வாயிலாகப் சொல்லப்பட்டது. எளிய மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் சொல்லப்பட்டது. மனித இன ஏற்றத் தாழ்வு, மனித உரிமை பாதிப்பு, அரசியல்வாதிகளின் ஒழுக்கக் கேடு, பொருளியல் சீர்கேடு, வேலையில்லாத் திண்டாட்டம், புரட்சி உணர்வு முதலானவற்றைக் காட்டுகிற நவீன நாடகங்கள் உருவாக்கப்பட்டன என்றால் மிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக