Search The Blog

உரைநடை இலக்கியம்

உரைநடை என்பது, ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஓர் எழுத்து வடிவம் ஆகும். கவிதை போல அணிகள் இன்றி, நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். உரைநடை, பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும், ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது. இதனால் இது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சியங்கள், ஒலிபரப்பு ஊடகங்கள், திரைப்படம், கடிதங்கள், வரலாறு, மெய்யியல், வாழ்க்கை வரலாறு, போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த தொடர்புகளுக்குப் பயன்படுகின்றது.

உரைநடைக்குக் குறிப்பான வடிவமோ, எதுகை, மோனை போன்ற அணிகளோ இருப்பதில்லை எனினும், உரைநடைகளில், அடுக்கு மொழிகள் போன்ற கவிதைப் பாங்கு காணப்படுவது உண்டு. கவிதை, உரைநடை ஆகிய இரண்டு இலக்கிய வடிவங்களையும் கலந்து உருவான ஒன்று, வசன கவிதை என அழைக்கப்படுவது உண்டு. கவிதை, ஓரளவு செயற்கைத் தன்மை கொண்டது. உரைநடையோ, இயல்பான ஒழுங்கில் அமைவது.

வரலாறு

தமிழ்நாட்டில் அச்சு இயந்திரங்களின் வருகை மற்றும் பயன்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டன. கி.பி.1577-இல் தமிழ்மொழியில் முதல் அச்சிடும் முயற்சி நடந்தது. கிருத்துவப் பாதிரிமார்கள், தம் சமய நூல்களை அச்சிட்டு வழங்க முற்பட்டனர். பதினேழு, பதினெட்டு நூற்றாண்டுகள் வரை அச்சு இயந்திரங்கள் கிருத்துவ பாதிரிமார்களிடத்தும் கிழக்கிந்தியக் கம்பெனியினரிடத்தும் பயன்பாட்டில் இருந்து வந்தன. இக்கால கட்டத்தில், ஜெர்மன் நாட்டினரான சீகன் பால்கு என்பவர், நான்காம் பிரெடரிக் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, சமயப் பணியாற்ற தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில், 1709-இல் முதலாவது அச்சுக் கூடத்தையும், அதற்குரிய காகிதத் தொழிற்சாலையையும் நிறுவினார். இதன் மூலமாக சமயப் பரப்புரையும், தமிழ் நூல்களை அச்சிட்டு வழங்கும் பணியும் தொடங்கியது. இவ்வாறாகத் தமிழில் மெல்ல உரைநடை வடிவம் வளர்ச்சியடைந்தது. தமிழ் உரைநடையின் முன்னோடியாக வீரமாமுனிவர் அறியப்படுகிறார். இவர் எழுதிய பரமார்த்த குரு கதை, எளிய உரைநடையில் அமையப்பெற்று வழிகாட்டியாக விளங்கியது. 19-ஆம் நூற்றாண்டில்தான் அச்சு இயந்திரங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தும் உரிமை பெற்றனர்.

உரைநடை வளர்ச்சி

பழைய, புதிய செய்யுள் இலக்கியங்கள், புதிய உரைநடை நூல்கள், இதழ்கள் போன்றவற்றை அச்சிட்டுப் பரப்பிட அச்சுக்கருவிகள் நன்கு பயன்பட்டன. ஆங்கிலேயக் கல்வி முறையைப் பின்பற்றும் தமிழ்க் கல்வி நிலையங்களின் பாடநூல்கள் மூலமாகவும், தமிழில் உரைநடை வளர்ச்சியுற்றது. குறைந்த விலைக்குப் பெறப்பட்ட அச்சிட்ட நூல்களால் படிப்போரின் எண்ணிக்கை கூடியது. மேலைநாட்டாரின் அடியொற்றிப் பலரும் கதைகள், கட்டுரைகள், இதழ்கள், அகராதிகள், திறனாய்வுகள் முதலானவற்றில் ஈடுபாடு கொண்டு, உரைநடை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உரைநடை வளர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள் தொடங்கி, சுந்தரம் பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார் வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காய்தல், உவத்தல் அகற்றி ஆராயும் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக