புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத சஞ்சிகைகளில் தொடராக வெளிவருவதும் உண்டு. நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கிய வடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கிய வகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது
மேல்நாட்டவர் தொடர்பால் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வகைதான் புதினமாகும். ஒருவருடைய வாழ்வைக் கூறக்கூடியது தான் நாவல் ஆகும்.
புதினங்களை நாவல்கள் என்றும் நவீனம் என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் நாவல்கள் என்றே அழைத்தனர். பிற்காலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து புதினம் என அழைத்தனர்.
பொதுமக்கள் படிக்கும் இலக்கிய வகையாக நாவல் இருக்க வேண்டும். இதுவே ஆரம்ப நாவலின் கருத்தாகும்.
நாவல் என்ற இலக்கியமானது முதன்முதலில் இத்தாலியில் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது.
நாவல் என்னும் சொல் புதுமை என்ற பொருளைத் தரவல்லது. இச்சொல் 'Novela' என்னும் இத்தாலியச் மொழியிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நாவல் என்னும் சொல் ஆங்கில மொழியில் வழக்காட்சியுற்று நிலைபெற்று வந்துள்ளது. கொலம்பியக் கலைக்களஞ்சிய நூல் (The Colombia Encyclopedia), இதற்கு 'உரைநடையால் அமைந்த நெடிய கதை' என விளக்கம் அளிக்கிறது. வெப்ஸ்டரின் அகரமுதலியானது (Webster's New 20th Century Dictionary), நாவல் என்பதற்கு, மனித உணர்ச்சிகள், எண்ணங்கள் அவர்தம் செயல்கள் ஆகியவற்றை விளக்கி எடுத்துரைக்கின்ற, உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்று விரிவாக விளக்கமளித்துள்ளது. இத்தாலி நாட்டில் தோன்றிய நாவல் இலக்கியம் தொடக்கத்தில் காதல் நிகழ்வுகளைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தது. பின், இயற்கையாக நடக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளவாறு சித்திரிப்பதால் புனைகதை என்னும் பொருளில் கையாளப்பட்டது. தமிழில் நாவலை புதினம் என்று வழங்கிவரும் போக்கு நிலவுகிறது
1) பிரதாப முதலியார் சரித்திரம்-1876-மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம்-1896-இராஜமய்யர்
3) பத்மாவதி சரித்திரம்-1898-அ.மாதவையா
இம்மூன்று புதினங்களும் சமூக நோக்கு, பெண்ணின் சிறப்புகள், நகைச்சுவை நடை, புதினத்தைச் சரித்திரம் எனக் கொள்ளல் ஆகிய பொதுப்பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றன. இவற்றுள் புதின உத்திகள் கொண்டு விளங்குவது கமலாம்பாள் சரித்திரம் ஆகும். தொடர்ந்து, குருசாமி சர்மாவின் பிரேமகலாவத்யம் பெண்கல்வி மறுப்பையும், நடேச சாஸ்திரியின் தீனதயாளு, திக்கற்ற இரு குழந்தைகள் ஆகியவை பால்யவிவாகத்தையும், அ.மாதவையாவின் விஜய மார்த்தாண்டன் மறவர் மற்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம் குறித்தும் முத்துமீனாட்சி(1903) கைம்மைக் கொடுமையையும், வில்லியம் பொன்னுசாமியின் கமலாக்ஷி மற்றும் சிவகுமரன் சமுதாயப் பார்வையும் கொண்ட புதினங்களாக இருந்து வருகின்றன.
மேலும் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் தரைசாமி ஐயங்கார் ஆகியோர் மேனாட்டு நாவல்களைத் தழுவித் தமிழில் புதினங்கள் பல எழுதியுள்ளனர்.
கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்டக் கூடியது. புதினமானது பல்வேறு கட்டமைப்புக்களை உள்ளடக்கக் கூடியது.
- சமுதாயப் புதினங்கள்
- வரலாற்றுப் புதினங்கள்
- வட்டார புதினங்கள்
- மொழிபெயர்ப்புப் புதினங்கள்
- அரசியல் புதினங்கள்
- தழுவல் புதினங்கள்
- உளவியல் புதினங்கள்
- நனவோடை புதினங்கள்
துப்பறியும் புதினங்கள்(1910)
ஆங்கில மொழிப் புலமை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தைத் தழுவி பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்தனர். அவர்களுள் சிலர் பின்வருமாறு:
ஆரணி குப்புசாமி முதலியார்(1867-1925): ஆங்கிலத்தில் வெளிவந்த பல புதினங்களைத் தழுவி இவர், தமிழ்மொழிச் சூழலுக்கேற்ப சுமார் எழுபத்தைந்து துப்பறியும் புதினங்களைப் படைத்தார். அவற்றுள் இரத்தினபுரி ரகசியம்(ஒன்பது பாகங்கள்), தபால் கொள்ளைக்காரன், மஞ்சள் அறையின் மர்மம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்(1880-1942): இவர் மேனகா, கும்பகோணம் வக்கீல், பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் முதலான புதினங்களை எழுதியுள்ளார்.
ஜே.ஆர்.ரங்கராஜூ(1875-1956): துப்பறியும் கோவிந்தன், சந்திரகாந்தா, இராஜாம்பாள், மோகனசுந்தரம் போன்ற புதினங்கள் இவருடையதாகும்.
வை.மு.கோதைநாயகி அம்மாள்(1901-1960): இவர் கிழக்கு வெளுத்தது, புனித பவனம், தைரிய லட்சுமி முதலிய புதினங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய மொத்த புதினங்களின் எண்ணிக்கை நூற்றுப் பதினைந்து ஆகும்.
மேலும்,தேவன், தமிழ்வாணன், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் முதலானோர் பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்துள்ளனர்.
சமுதாயப் புதினங்கள்
சமுதாய வாழ்வியல் சூழலையும், சமூகச் சிக்கல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் புதினங்கள் சமுதாயப் புதினங்களாகும்.
கே.எஸ்.வெங்கடரமணி: இவரால் எழுதப்பட்ட முருகன் ஓர் உழவன்(1928), கந்தன் ஒரு தேசபக்தன்(1938) ஆகிய புதினங்கள் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் தேசப்பற்றையும் அடிப்படைகளாகக் கொண்டிருந்தன.
'கல்கி'ரா.கிருஷ்ணமூர்த்தி(1899-1954): இவர் எழுதிய தியாகபூமி, கள்வனின் காதலி, மகுடபதி, அலை ஒசை முதலான புதினங்கள் சாதிக் கொடுமை, விதவைக் கொடுமை, பொருந்தாமணம், விடுதலை வேட்கை ஆகியவற்றை எடுத்துரைத்தன.
நாரணதுரைக் கண்ணன்: 1942-இல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு தியாகத் தழும்பு என்னும் புதினத்தை இவர் உருவாக்கினார். தரங்கிணி, கோகிலா, நடுத்தெரு நாராயணன் ஆகிய புதினங்களும் இவருடையதாகும்.
ர.சு.நல்லபெருமாள்: இவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் புதினம் நாட்டு விடுதலையில் பெண்களின் ஈடுபாடு குறித்து பேசப்பட்டிருந்தது.
ராஜம் கிருஷ்ணன்:இவர் எழுதிய வளைக்கரம் கோவாவின் விடுதலைப் போராட்டத்தைச் சித்திரித்தது. குறிஞ்சித்தேன், கூட்டுக் குஞ்சுகள், கரிப்பு மணிகள், வேருக்கு நீர், அலைவாய்க் கரையில் முதலான புதினங்களையும் இவர் படைத்துள்ளார்.
அகிலன்: பெண், எங்கே போகிறோம்?, நெஞ்சின் அலைகள், வேங்கையின் மைந்தன், சித்திரப்பாவை முதலான சமுதாய புதினங்களை இவர் எழுதியிருக்கிறார்.
இதுதவிர, வ.ரா.வின் சுந்தரி, கோதைத்தீவு, பி.எஸ்.ராமையாவின் பிரேம ஹாரம், ஆர்வியின் அணையா விளக்கு, மு.வ.வின் நெஞ்சில் ஒரு முள், அல்லி, அகல்விளக்கு, கரித்துண்டு, விந்தனின் பாலும் பாவையும், டி.கே.சீனிவாசனின் ஆடும் மாடும், சிதம்பர சுப்பிரமணியத்தின் இதயநாதம், க.நா.சு.வின் பொய்த்தேவு, எம்.வி.வெங்கடராமின் காதுகள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ரகுநாதனின் பஞ்சும் பசியும், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன்விலங்கு, சமுதாய வீதி, டி.செல்வராஜின் மலரும் சருகும், நீல.பத்மநாபனின் தலைமுறைகள், த.ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், பாரிஸுக்குப் போ, சி.என்.அண்ணாதுரையின் பார்வதி பி.ஏ., ரங்கோன் ராதா, ஜெகசிற்பியனின் கிளிஞ்சல் கோபுரம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, பொன்னீலனின் புதிய தரிசனங்கள், மறுபக்கம், அசோகமித்திரனின் தண்ணீர், அப்பாவின் சிநேகிதர், தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி, எழுத்தாளர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின் புனிதம் தேடும் புதினம் உமா சந்திரனின் முள்ளும் மலரும், சா.கந்தசாமியின் விசாரணை கமிஷன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், ஜெயமோகனின் ரப்பர், அன்வர் பாலசிங்கத்தின் செந்நீர் முதலான சமுதாய புதினங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
வரலாற்றுப் புதினங்கள்
பண்டைத் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுப் புதினங்கள் எழுதப்படுகின்றன. அந்த வகையில் கல்கி, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகியவற்றையும், அகிலன், மணிபல்லவம், கயல்விழி, வேங்கையின் மைந்தன், வெற்றித் திருநகர் ஆகிய புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யனின் யவன ராணி, கடல் புறா, ராஜபேரிகை போன்றவையும் கோவி. மணிசேகரனின் அக்கினிக் கோவம், பீலிவளை, செம்பியன் செல்வி, அஜாத சத்ரு முதலானவையும் குறிப்பிடத்தகுந்தவை. இதுபோல், மு.மேத்தாவின் சோழநிலா, கலைஞர் கருணாநிதியின் ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், பூவண்ணனின் காந்தளூர்ச் சாலை, விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி, ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை, ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை,நந்திவர்மன் காதலி,திருச்சிற்றம்பலம் ஆகியவையும் அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி முதலானவை வரலாற்றுப் புதினங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
வட்டார புதினங்கள்
வட்டார புதினம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் களமாகக்கொண்டு,அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டும் குறிக்கோளுடன் எழுதப்படுவதாகும்.வட்டார புதினம் எழுதும் வழக்கை வேங்கடரமணி தோற்றுவித்தார். சில வட்டார புதினங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவையாவன:
மண்ணாசை-சங்கர்ராம் நாகம்மாள்,அறுவடை-ஆர்.சண்முக சுந்தரம் தங்கச் சம்பா-பூவை.எஸ்.ஆறுமுகம் மானாவாரி மனிதர்கள்-சூரியகாந்தன் ஏறுவெயில்-பெருமாள் முருகன் செந்நெல்-சோலை சுந்தர பெருமாள் தேரி மணல்-முகிலை இராசபாண்டியன் சாயத்திரை-சுப்ரபாரதிமணியன்
மொழிபெயர்ப்புப் புதினங்கள்
தமிழில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்,லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும்,விக்டர் ஹியூகோவின் ஏழைபடும் பாடு,தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன்,தோட்டியின் மகன்,காண்டேகர் மற்றும் தாகூர் புதினங்கள் பல மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.இப்பணியை கா.ஶ்ரீ.ஶ்ரீ.,த.நா.சேனாபதி,சிற்பி பாலசுப்பிரமணியம்,தமிழ்நாடன்,சுந்தர ராமசாமி முதலானோர் ஈடுபட்டனர்.
அரசியல் புதினங்கள்
நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளை மையமாக வைத்து விருப்பு வெறுப்பில்லாமல் அரசியல் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நாரண.துரைக்கண்ணனின் சீமான் சுயநலம்,நா.பார்த்தசாரதியின் நெஞ்சக்கனல்,வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர்,பெருமாள்முருகனின் மாதொருபாகன் போன்றவை அரசியல் புதினங்களுக்கு உதாரணங்களாகும்.
தழுவல் புதினங்கள்
அயல்நாட்டுப் புதினக் கதையைத் தமிழ்நாட்டுச் சூழலுக்கேற்பத் தழுவி எழுதுவதாகும்.மறைமலையடிகளின் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி,எஸ்.எஸ்.மாரிசாமியின் அநாதை ஆனந்தன்போன்ற புதினங்கள் தழுவி எழுதப்பட்ட புதினங்கள் ஆகும்.
உளவியல் புதினங்கள்
இருபாலரின் உளவியல் சிக்கல்கள் குறித்து இவை எடுத்துரைக்கின்றன.காட்டாக, தி.ஜானகிராமனின் மோக முள், அம்மா வந்தாள், கோவி.மணிசேகரனின் தென்னங்கீற்று, ஜெயகாந்தனின் ரிஷிமூலம், முதலானவற்றைக் கூறவியலும்.
நனவோடை புதினங்கள்
நனவோடை என்பது ஓர் உத்தியாகும். நனவோட்டத்தின் வழியே கதை கூறுதலாகும்.அசுர கணம்(க.நா.சு), ஜீவனாம்சம் (சி.சு.செல்லப்பா), அபிதா, புத்ர (லா.ச.ரா.) முதலியன நனவோடை புதினங்கள் ஆகும்.
புதின அமைப்பு
கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்டக் கூடியது. புதினமானது பல்வேறு கட்டமைப்புக்களை உள்ளடக்கக் கூடியது. அவையாவன,
- கதைக்களம்.
- கதைக்கரு.
- கருப்பொருள்.
- கதையும் கதைப் பின்னலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக