Search The Blog

ஆராய்ச்சிக் கட்டுரை

ஆய்வு என்பது 'ஆய்தல்'. பகுத்துப் பார்த்தல். ஆராய்தல் என்று பொருள். அதாவது நாம் விரும்பும் ஏதோவொன்று சார்ந்து நமக்கு 'எழும்' ஐயம் குறித்துச் செய்வதே ஆய்வு. எனவே முன்முடிவுகள் ( Prejudice ) கொண்டு ஆய்வைத் துவங்க முடியாது. அறிந்துகொள்ள முற்படுவதே ஆய்வு.ஆய்வு என்பது அறிவு சார்ந்தே தவிர உணர்வு சார்ந்து இருத்தலாகாது.


ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை:

  • தங்கள் ஆராய்ச்சியின் நோக்கம் மற்றும் நன்மைகளை விவாதிக்க வேண்டும். Methods : தங்களது செய்முறை, பயன்படுத்த கருவிகள், ரசாயனங்கள், நேரம், காலம், அளவு, செறிவு என அனைத்தையும் சுருக்கமாக எழுத வேண்டும். எழுத்து நடை : தங்களது செய்முறையை விவாதித்தலில் Past tense ல் Passive Voice ஆக இருக்க வேண்டும்.

  • உண்மைத்தன்மையை நோக்கிய பயணமாக இருக்கவேண்டும் ( Towards truth ). நமது நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளத் தேவை இல்லை , ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருத்தல் வேண்டும்.

  • நாம் இன்று ஆராய்ந்து சொல்லும் ஒரு விஷயம் நாளை வேறொருவரால் , காலத்தால் , அதிநவீனக் கருவிகளால் தாண்டிச் செல்லப்படும் என்பதையும் உணர வேண்டும். There is no absolute truth.

  • நமக்கு முன்னர்ச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளைக் கவனமாகப் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல நூல்கள் பல கற்றறிந்திருத்தல் வேண்டும்.

  • மனித குலத்திற்கும் இயற்கைக்கும் நன்மை விளைவிக்க வேண்டும்.

  • அறிவு சார்ந்து நிரூபிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். Scientific Approach

  • எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையும் அறமும் ( Righteousness ) இருத்தல் வேண்டும். இவையனைத்தையும் உணர்த்தும் விதமாக 'ஆய்வுக்கட்டுரை' இருத்தல் வேண்டும்.

    ஆராய்ச்சி கட்டுரைகளின் வகைகள்:

    ஆராய்ச்சி கட்டுரைகள் பலவகைகள் உண்டு. இவைகள் ஆராய்ச்சி கட்டுரையின் நீளம் மற்றும் வடிவத்தை பொறுத்தது.

    Communication : நீங்கள் ஆராய்ச்சியில் ஆரம்ப புள்ளியை முடித்துள்ளீர், தொடர்ந்து செய்வேன். மற்றவர் வெளியிடும் முன்னர் நான் இந்த துறையில் வேலை செய்கிறேன் என்பதனை காட்டும் விதமாக ஆராய்ச்சி கட்டுரை எழுதுதல். இதனை Communication என்பர், இதன் மொத்த நீளம் 4 பக்கங்கள்.

    Letter : இது அடுத்த கட்டம், பாதி ஆராய்ச்சியை முடித்துள்ளீர், மீதியை செய்து கொண்டிருக்கிரீர்கள், இதனை Letter வடிவில் வெளியிடலாம். இவை 4- 8 பக்கங்கள் வரை எழுதலாம்.

    Full article : இவை முழுவதும் முடித்த ஆராய்ச்சி, 8 - 32 பக்கங்கள் அல்லது அதற்கும் மேலாக கூட எழுதலாம்.

    Review article : இது ஆராய்ச்சி கட்டுரை அல்ல, மற்ற ஆராய்ச்சிகளின் தொகுப்பு கட்டுரை, பக்கங்களுக்கான வரையறை இல்லை.
    இது மட்டுமில்லாமல் Short communication, Emerged article, Extensive letter என பல்வேறு வகைகள் உண்டு.

    ஒரு ஆராய்ச்சி எப்போது முடியும் என கணிக்க முடியாது, சில நேரங்களில் 10 ஆண்டுகள் அதற்கு மேலாக கூட எடுக்கும். நம்மை போன்றே வேறு யாராவது அதனை ஆராய்ச்சி செய்து நமக்கு முன்னர் வெளியிட்டால் நாம் செய்ய அனைத்தும் வீணாகிவிடும். இந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடக்கும். இதனை தவிர்க்கவே அவ்வப்போது கட்டுரை வெளியிடுதல் அவசியமாகும்.

    கல்வி ஆய்வுக்கட்டுரையை எழுதுவதற்கான அவசியமான படிமுறைகள்

    ஆய்வுக்கட்டுரை என்பது ஒருவர் மேற்கொண்ட ஆராய்ச்சியினைப் பற்றிய விரிவான எழுத்தறிக்கை. அதன் மூலமே அந்தத் துறை சார்ந்த அறிஞர்கள் அல்லது சாமானிய மக்கள் மத்தியில் ஆதாரத்துடன் தன் ஆராய்ச்சியினை நிகழ்த்திக் காட்டி அங்கீகாரம் பெற முடியும்.

    • திட்டவரை

      முதலில் நம் ஆராய்ச்சிக்கான கருப்பொருட்கள், அவற்றுக்குத் தேவைப்பட்ட வழிமுறைகள், பொருட்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும்.

    • அமைப்பமறையை தெரிந்துகொள்ளுதல்
      கல்வி ஆய்வுக்கட்டுரையை முன்மொழிவதற்கான கூறுகளை, அதை வகுப்பதற்கான படிநிலைகளாக எழுத வேண்டும்.
      1. ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
      • ஆராய்ச்சிக்கான காரணம் மற்றும் ஆராய்ச்சியின் பயன்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டும்

      • எந்த நடைமுறை பிரச்சனை அல்லது இடர்களை சரி செய்யும் விதமாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை எளிமையாக புரியும் வண்ணம் விளக்கியிருக்க வேண்டும்


      2. முன்னுரை
      • தொடக்கத்தில் எந்த மாதிரியாக பிரச்சனைகளை கையாண்டு, இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது என்பதையும், எந்தத் துறை அடிப்படையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் விளக்கியிருக்க வேண்டும்

      • முழு ஆய்வுக்கட்டுரைக்கும் ஆதாராப்புள்ளியாக அமைந்தவற்றைப் பற்றி கூறியிருக்க வேண்டும்


      3. முந்தைய ஆய்வுத்தொகுப்புை
      • இதற்கு முன் யாராவது மேற்கொண்ட ஆராய்ச்சிகளை ஒருவர் அடிப்படையாக எடுத்துக்கொண்டால், அந்தத் ஆராய்ச்சியினால் ஒருவர் பயன்படுத்திக் கொண்ட முறைகள் மற்றும் அதிலிருந்து மேம்பட்டவைகளை எடுத்துரைக்க வேண்டும்


      4.ஆய்வின் காரணம்
      • ஆய்வின் காரணத்தை விரிவாக விளக்கி, இந்த ஆய்வின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா, என்பதையும் கூற வேண்டும்


      5. அணுகுமுறை
      • முறைகள்
        எந்தெந்த முறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதோ, அதன் வழியே ஈட்டிய பலனைப் பற்றி விளக்க வேண்டும்
        எத்தனை முறைகளை எவ்வாறெல்லாம் கையாண்டுள்ளோம் என்பதை விளக்க வேண்டும்

      • மூல நூற்பட்டியல்
        நம் ஆராய்ச்சியினைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கவும், சில முறைகளைப் பற்றிய தெளிவான அறிவும் கிடைக்கப்பெற்ற நூற்பட்டியலை இணைக்க வேண்டும்
        ஆய்வுக்கட்டுரை இயற்றிவர்களின் பெயர்கள், நூலின் பெயர், இடம், வெளியீட்டாளர், வெளியிட்ட ஆண்டு, எந்த ஊடகத்தின் வழியே வெளியிடப்பட்டது என்ற விவரங்களை எல்லாம் இணைக்க வேண்டும்


      6. சாத்தியமாகும் பலன்கள்ை
      • இந்த ஆய்வின் வழியே சாத்தியமாகும் பலன்களைப் பற்றிய விரிவான விளக்கம் தர வேண்டும்

      • கணக்கீடுகள், விளக்கப்படம், வரைபடம், சமன்பாடு போன்றவை தேவைபட்டால் அவற்றையும் இணைக்க வேண்டும்


      7. வரம்புகள்
      • இந்த ஆய்வு சில இடர்களைக் களைந்து, ஒரு நோக்கத்திற்கு உதவினாலும், இந்த ஆய்வின் நடைமுறை சிக்கல்கள், சவால்களைப் பற்றி விளக்க வேண்டும். உதாரணமாக, சூரிய ஒளியினைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி என்றால், இதை கோடைகாலத்தில் மட்டுமே ஆற்றல்மிக்கதாக பயன்படுத்த முடியும் என்பது போல இந்த ஆய்வு நல்ல முறையில் வெற்றிபெற தடை போடும் சில சிக்கல்களை கண்டறிந்து விளக்க வேண்டும்


      8. பங்களிப்புகள்
      • ஏற்கனவே இருக்கும் தொழிற்நுட்பமும், கண்டறிந்த நுட்பமும் போக இந்த ஆராய்ச்சியின் மூலம் நமக்குக் கிடைத்த புதுமையான கோணங்களை விளக்க வேண்டும்

      • ஒருவர் யாருடைய துணையுமின்றி தானே கண்டறிந்தவற்றைப் பற்றிய விளக்கங்களை எழுத வேண்டும்


      9. முன்மொழியப்பட்ட விளக்கவுரை
      • நம் ஆராய்ச்சியின் ஆதாரங்களை சரியாக பகுப்பாய்ந்து அவற்றை சரியான தலைப்புகளுடன் பொருத்தி விளக்கியிருக்க வேண்டும்

      • அந்த விளக்கங்கள் எளியவருக்கும் துறைசார் அறிவும் இல்லாதவர்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும்


      10. முடிவுரை
      • இறுதியாக இந்த ஆய்வின் முழுமுதற் பலன் கிடைத்தால், அது எவ்வாறு பயன் தரும், யாருக்கு எந்த சூழ்நிலையில் பயன்தரும் என்பதையும் கூற வேண்டும். அதை எளிய முறையில் விளக்கி முற்று பெறச் செய்ய வேண்டும்

    • எழுத்துக்கான திட்டமிடல்
      1. ஆய்வினை எழுத்து மூலமாக ஒருவருக்கு எவ்வாறு புரிய வைப்பது என்பதை சரியாக திட்டமிட்டு, முறையான தலைப்புகளும், அந்த தலைப்புகளை நியாயப்படுத்தும் விதமாக கட்டுரையை இயற்ற வேண்டும்

      2. ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு படியாக ஆய்வினை விளக்கும் படி இருக்க வேண்டும், முழுவதுமாக எந்த முறையும் இல்லாமல் வெறுமென விளக்கியிருந்தால், அவற்றை படித்து உறுதி செய்பவர் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்

      3. திட்டமிட்டு எழுதி முடித்ததும், அனைத்தையும் மீண்டும் வாசித்து பிழைகளை சரிசெய்ய வேண்டும், சீரமைப்பு தேவைப்பட்டால் அதையும் செய்ய வேண்டும்

    • ஆதாரப்பூர்வமாக எழுதுதல்
      1. ஆய்வைப் பற்றி ஒவ்வொன்றாக விளக்கும் வேளையில் அதற்குத் தேவையான ஆதாரங்கள், ஒன்றை விளக்கும் பொழுது அதற்கான நம்பத்தகுந்த தரவுகள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்

      2. விளக்கும் ஒவ்வொன்றும் அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்ப வடிவமைப்பும், எழுத்துக்களின் செரிவும், பக்கங்களின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும்

    • நிரூபணம்
      1. அனைத்தையும் எழுதி முடித்த பிறகு, சீரமைப்பு, எழுத்துக்களின் வடிவம், பக்கங்களின் வடிவமைப்பு, பக்க எண்கள் முதலிய அனைத்து படிக்க இனிதாக இருக்க வைக்கும் காரணிகளை சரிபார்க்க வேண்டும்

      2. ஆய்வுக்கட்டுரையை ஒரு முறைக்கு மேல் தீர வாசித்து, சரி பார்க்க வேண்டும். தேவைபட்டால் வேறு இருவரைக் கூட படித்துப் பார்க்கச் சொல்லலாம்

      3. அனைத்து உழைப்பும், முயற்சியையும் இந்த ஆய்வுக்கட்டுரைக்காகவே என்பதை மனதில் கொண்டு, அதற்கேற்ப நாம் தயார் செய்திருக்க வேண்டும்

      4. முக்கியமாக படிப்பவருக்கு எளிதாக புரியும் வண்ணம் அழகாக இயற்றியிருக்க வேண்டும்

      5. அந்தக் கல்வி ஆய்வுக்கட்டுரைக்காக நாம் எவ்வளவு முயற்சி செய்து உழைத்திருக்கிறோம் என்பது படிக்கும் அறிஞர்களுக்கும், நம் ஆய்வுக்கட்டுரையை அங்கீகரிப்பவருக்கும் தெரியும் அளவிற்கு திறம்பட எழுத வேண்டும்

புதுக்கவிதை தமிழ் இலக்கியம்


புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.

உலகில் கவிதைகளை விரும்பாத ஆட்களே இல்லை. இவ்வகையில் கவிதைகளின் ஒரு வடிவமே புதுக்கவிதைகளாகும். மரபுக்கவிதை மௌனமாய் மார்தட்டிக் கொள்ள புதுக்கவிதைகள் புரியும் விதமாய் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

நேசம்⸴ காதல்⸴ கோபம்⸴ மகிழ்ச்சி⸴ அன்பு⸴ பாசம்⸴ துக்கம்⸴ ஏக்கம்⸴ எதிர்பார்ப்பு⸴ காத்திருப்பு என எல்லாவற்றையும் சுவைபட புதுக்கவிதைகள் அலங்கரித்து வருகின்றன.

புரியும் வகையிலும்⸴ தெளிவாகவும் புதுக்கவிதைகள் வரையப்படுகின்றன. மனித மனங்கள் நிரப்பப்படுகின்றன. இத்தகைய புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


அமைப்பு

மரபுக்கவிதை போன்று சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை கொண்டிராத ஒன்றாக புதுக்கவிதை காணப்படுகின்றது. புதுக்கவிதைகளில் காணும் காட்சியினை அலங்கார வார்த்தைகளின்றி, உள்ளதை உள்ளபடியே எளிய தமிழ்ச் சொற்கள் கொண்டே எழுதப்படும் கவிதை வடிவம்.

  • அடிவரையறை (வரி எண்ணிக்கை) இத்தனை அடிகள்தான் எழுதப்பட வேண்டும் என்ற வரையறை இல்லை.

  • அடியமைப்பு (வரியமைப்பு): ஒவ்வொரு அடியிலும் குறிப்பிட்ட சீர்கள் இருக்க வேண்டுமென்ற வரையறை இல்லை.

  • சொற்சுருக்கம்: சொற்சுருக்கம் இருக்க வேண்டியது புதுக்கவிதைக்கான முக்கிய அம்சம்.

  • ஒலிநயம்: பேச்சுவழக்குச் சொற்களிடையே ஒலிநயம் காணப்படுவது பொதுவானது.

  • சொல்லாட்சி: சொற்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதும் வடமொழி, ஆங்கிலம், பேச்சுவழக்குச் சார்ந்த சொற்களுக்கும் பாவிக்கப்படுகிறது.

  • தொடை நயம்: எதுகை, மோனை, இயைபு என்னும் தொடை நயங்களெல்லாம் கட்டாயம் என்ற நிலையில்லை.

  • யாப்புச் சாயல் மற்றும் நாட்டுப்புறச் சாயல்: அடிவரையறை செய்து எழுதும்போது மரபுக்கவிதை போன்று இது தோற்றமளிக்கும்.

  • வசன நடை மற்றும் உரையாடல் பாங்கு: வசன நடையும் உரையாடல் பாங்கும் சிறப்பாக எளிய முறையில் பாவிக்கப்படும்.

  • காட்சி அமைப்பு: ஒரு கருப்பொருளை காட்சியாகக் கொண்டு நம்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் எளிய வடிவம் புதுக்கவிதை


தோற்றம்

1910ஆம் ஆண்டில் “வால்ட் விட்மன்” எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதிய “புல்லின் இதழ்கள்ˮ எனும் நூலே புதுக்கவிதையின் முதல் நூலாகும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவை விட்டு இங்கிலாந்தில் குடியேறிய “எஸ்ரா பவுண்ட்” ஒரு சிறந்த புதுமையான புதுக்கவிதையைத் தந்தார்.
கி.பி 20ஆம் நூற்றாண்டு தொடங்கி புதுக்கவிதை தமிழிலக்கியத்தில் தோன்றி சிறக்கலானது. பாரதியால் எழுதப்பட்ட வசனக் கவிதைகளே தமிழில் காணும் புதுக்கவிதைக்கு முன்னோடியாக அமைந்தது. தமிழ் இலக்கிய வளர்ச்சியும் அதனோடு கூடிய தேவையும் புதுக்கவிதைக்கு வித்திட்டது.



புதுக்கவிதைக்கான இலக்கணம்

தொல்காப்பியர் புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை “விருந்துˮ எனப் பெயரிட்டு சிறப்பித்து வரவேற்றார். இதேபோல் நன்னூலார் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானேˮ என்றார்.
புதுக்கவிதை மரபுக் கவிதைகள் போலல்ல. இவை இலக்கணச் செங்கோல்⸴ யாப்புச் சிம்மாசனம்⸴ எதுகை பல்லக்கு⸴ தனிமொழி சேனை⸴ பண்டித பவனி இவை எதுவும் இல்லாது தம்மைத் தாமே ஆளும் சிறப்பு பெற்ற கவிதைகள் புதுக்கவிதைகளாகும்.



புதுக்கவிதையின் வளர்ச்சி காலம்

புதுக்கவிதையானது மூன்று காலகட்டங்களில் வளர்ச்சியடைந்தது. மணிக்கொடி காலம்⸴ எழுத்துக் காலம்⸴ வானம்பாடிக் காலம் என்பனவே அவையாகும்.
மணிக்கொடி காலத்தில் மணிக்கொடி இதழ் மட்டுமன்றி வேறு பல இதழ்களும் புதுக்கவிதைகளை வெளியிட்டுள்ளன. ஜெயபாரதி⸴ சூறாவளி⸴ மோகினி போன்ற இதழ்களைக் கூறலாம். இந்நூல்கள் மணிக்கொடி முதலில் தோன்றியதால் இதனை மணிக்கொடி காலம் எனப்பட்டது.
எழுத்து காலத்தில் எழுத்து⸴ சரஸ்வதி⸴ இலக்கியவட்டம்⸴ தாமரை⸴ கசடதபற போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளை வளர்ந்தன. சிட்னி⸴ வல்லிக்கண்ணன்⸴ மயன் ஆகியோர் இக்காலத்திற்குச் சிறப்புச் சேர்த்தவர்களாவர்.
வானம்பாடி காலத்தில் வானம்பாடி⸴ தீபம்⸴ கணையாழி⸴ சதங்கை முதலிய இதழ்கள் புதுக்கவிதைகளைப் பிரசுரித்தன. சகங்கை⸴ புவியரசு போன்றவர்களை இக்காலத்து புதுக்கவிஞர்களாக்கியது.



புதுக்கவிதைகளின் சிறப்புக்கள்

புதுக்கவிதைகள் எளிய மொழி நடையிலுள்ளதால் அனைவராலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறப்புக்குச் சான்றாக புதுக்கவிதைகள் விளங்குகின்றன.
புதுக்கவிதை வழிப் பல கவிதை முன்னோடிகள் வளர்ச்சி அடைந்தனர். சுருக்கம் கொண்டதனால் எழுதுவது இலகுவாகும். பேச்சுவழக்குச் சொற்கள்⸴ ஒலிநயம் காணப்படுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வடமொழி⸴ ஆங்கிலம்⸴ பேச்சு வழக்கு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கருப்பொருளைக் காட்சியாகக் கொண்டு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தக் கூடியதாய் புதுக்கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

சிறுகதை இலக்கியம்


சிறுகதை என்பது சுருக்கமான, கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். இது பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
சிறுகதைகள் மிகவும் சிறுகதைகள், அதில் ஒரு தலைப்பு உரையாற்றப்படுகிறது. அவை பொதுவாக பொருத்தமான விஷயங்களில் வரம்புகள் இல்லை மற்றும் கற்பனைக் கதைகள் முதல் பரிந்துரைக்கும் அல்லது அசாதாரண இயல்புடைய நூல்கள் வரை இருக்கும். மைக்ரோ-கதைகள் எப்போதுமே இயற்கைக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகள் அல்லது ஈர்க்கக்கூடிய யதார்த்தத்தின் விளக்கங்களை நோக்கிச் செல்கின்றன.

எவ்வாறாயினும், இந்த இலக்கிய துணை வகைக்குள் இருக்கும் இரண்டு அடிப்படை கூறுகள் அசல் மற்றும் ஒத்திசைவு. இந்த வழியில், சிறுகதை வாசகரை ஆச்சரியப்படுத்தும் அல்லது வசீகரிக்கும் திறனைக் கொண்டிருக்கும் (மேலும் இது "எளிதில் மறக்கக்கூடிய" கதை அல்ல). அதாவது, முதல் முதல் கடைசி வாக்கியம் வரை தனது பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறன் ஆசிரியருக்கு இருக்க வேண்டும்.

முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவம். பெரும்பாலும் நடப்பியல் நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப் புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.

தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள்.[1] உண்மையில் பாரதியின் முதல் சிறுகதை 1905ல் தொடங்கி - அவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சக்கரவர்த்தினி என்ற இதழில்- பகுதிகளாக வெளியிடப்பட்ட 'துளஸிபயி என்ற இரஜபுதனக் கன்னிகையின் சரித்திரம்' என்பதாகும். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை என்பது பலரால் சொல்லப்பட்டுவரும் விவாதத்திற்குரிய கருத்தாகும். சிறுகதை என்ற புதிய இலக்கியவகை தமிழில் அறிமுகமானபோது - சிறுகதை என்பது என்ன?என்ற முடிவான, ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து ஏதும் உருப்பெற்று நிலைபெறாத அக்காலகட்டத்தில் (1900-1920), பாரதியார், மாதவையா,வ.வே.சு. ஐயர் ஆகியோர் தத்தமக்கு வாகான வகையாகச் சோதனை முயற்சிகளாக எழுதினர். வ.வே.சு ஐயரே பிற்காலத்தில் நெடிய சரித்திரக் கதைகள் எழுதக் 'கைப்பழக்கமாகவே ' சிறுகதைகள் எழுதி வருவதாகத் தன் நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் வார்த்தைப்படுத்தியுள்ளார்.

தாம் சுயமாகச் சிறுகதைகள் எழுதும் முன்னரே தாகூரின் வங்கமொழிச் சிறுகதைகளை மூலமொழியறிந்திருந்த பாரதியார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளாரென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் பார்த்தால், பாரதியார் தமது சொந்தச் சிறுகதைகளைத் தாம் விரும்பிய-'சொல்புதிது, பொருள் புதிது' எனும் முற்போக்கு எண்ணப்படி வார்த்தளித்துள்ளாரென்ற ஏற்பே நியாயமானதாக இருக்கும்.

தற்காலத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் மூல மூவர்களான பாரதியார், மாதவையா, வ.வே.சு. ஐயர் ஆகிய மூவருமே 1925வாக்கில் இயற்கையடைந்துவிட்ட பின்னர் ஏற்பட்டிருந்த வெற்றிடக்காலம் நீண்டு தொடர்ந்து விடாமல் தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று
சொல்லப்படுகிறார்கள்.

தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரசாவின் பொம்மை], லா.ச.ராமாமிருதம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு அழகிரிசாமி [ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] சுஜாதா போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதைப் படைப்பிலக்கியம்

எந்த வகைப் படைப்பிலக்கியத்திற்கும், ஆர்வத்திற்கும் மேலாக மூன்று அடிப்படைகள் தேவைப்படுகின்றன. பின்வரும் தன்மையிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் தோன்றியுள்ளன.

  • வாழ்க்கை அனுபவம்
  • வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வம்
  • கற்பனைத் திறன்

சிறுகதை, உரைநடைப் படைப்பிலக்கியத்திற்கு உரியது. 20ஆம் நூற்றாண்டின் புதுமைகளாக இவை உருவாகியுள்ளன. நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கற்பனைகள் சிறுகதைகளாக மலர்கின்றன. இக்காலப் படைப்பிலக்கியங்களுள் சிறந்ததாகச் சிறுகதை இலக்கியம் கருதப்படுகிறது. உயிராக உணர்ச்சியும், உருவமாக மொழியும் அமைந்து சிறுகதை வாழ்வு பெற்றுள்ளது. மக்களை இன்புறுத்தும் வகையிலும், அறிவுறுத்தும் வகையிலும் சிறுகதைகள் தோன்றியுள்ளன.

சிறுகதைப் படைப்பிலக்கியங்களின் மூலம் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. மதங்கள் வளர்ந்திருக்கின்றன. மனிதப் பண்புகள் மெருகேறி இருக்கின்றன.
இந்தியாவில் ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி, அறிவியல் புரட்சி, தேசிய எழுச்சி ஆகியன உரைநடை இலக்கியத்தை வளர்ப்பதற்கான காரணிகள் ஆயின. இந்திய மொழிகளிலும் மரபுக் கவிதைகள் படிப்படியாய்க் குறைந்து, புதிய கவிதைகள் தோன்றின. அவ்வாறே கதைகளிலும் மரபுநிலை மாறி, புதுமை இடம்பெறத் தொடங்கியது. இதன் விளைவு சிறுகதை இலக்கியம் சிறந்த இலக்கிய வடிவமாய் மலர ஆரம்பித்தது. சிறுகதை ஐரோப்பியர் வரவால் தமிழுக்குக் கிடைத்தது என்பது அறியத்தக்கது.

சிறுகதை, மக்களின் கதைகேட்கும் ஆர்வத்தால் பொழுது போக்கிற்கு இடமளிக்கும் அளவில் தோன்றியதாகும். இன்று, இச்சிறுகதைகள் சமுதாயத்தில் பலரும் விரும்பிப் படித்துப் பயன்கொள்ளத்தக்க அளவில் எளிய இலக்கியங்களாய்த் திகழ்கின்றன. சிறுகதைகள் வாழ்க்கைக்குத் திருப்பங்களாக அமைகின்றன. சிறந்த சிறுகதைகள் போதனை செய்து ஒழுக்கத்தினை உயர்த்துவதாகவும் அமைகின்றன.

கட்டுரை இலக்கியம்


ஒரு பொருளைப் பற்றிய கருத்துகளைக் கட்டி சிறப்பாக உரைப்பது கட்டுரை இலக்கியம் ஆகும். இது மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் எழுந்தது தான் இந்த கட்டுரை இலக்கியம். இது உரைநடையில் அமைவது. இதன் வகைகள் இப்போது பார்க்கலாம்.

  • வாழ்க்கை வரலாறு / சுயசரிதை
  • ஆராய்ச்சி நூல்கள்
  • விளக்க நூல்கள்
  • பயண இலக்கிய நூல்கள்

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான விளக்கவுரையாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் சாித்திரம் என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும். இது ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு போல் அல்லாது, ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் உதாரணமாக ஒருவருடைய நெருக்கமான வாழ்க்கை அனுபவங்களையும், அவருடைய ஆளுமையைப் பற்றி விளக்குவதாகவும் உள்ளது.
சுயசரிதை என்பது கதையல்ல. ஆனால் ஒரு கதையில் ஒருவருடைய வாழ்க்கைச் சாிதத்தைச் சித்தாிக்கலாம். இந்த தனிநடையானது இலக்கியம் முதல் சினிமா வரையிலான பல்வேறு ஊடகங்களிலிருந்து உருவானது. அதிகாரம் பெற்ற வாழ்க்கை வரலாறு என்பது யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய அனுமதி பெற்றோ, அவருடைய ஒத்துழைப்புடனோ அல்லது அவருடைய வழித்தோன்றல்களின் பங்களிப்புடனோ எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். சுய சாிதை என்பது ஒருவர் தன்னைப் பற்றி தானோ அல்லது உதவியாளரை வைத்தோ எழுதுவது.
முதலில் ஒருவருடைய வரலாற்றை எழுதும் முறை வரலாற்றின் ஒரு துணைப் பகுதியாகவே கருதப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரைப் பற்றி எழுதக் கூடியதாகவே இருந்தது. சுதந்திர வகை வாழ்க்கை வரலாறு எழுதுதல் முறையானது ஆனால் பொது வரலாறு எழுதுதல் முறையிலிருந்து வேறுபட்டது. இந்த முறை 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தற்போதைய நிலையை இது 20-ஆம் நூற்றாண்டில்தான் அடைந்தது.
கார்னீலியஸ் நீபோஸ் என்பவர் முந்தைய பயோகிராஃபி எழுத்தாளர்களில் ஒருவராவார். அவர் கி.மு. 44-ல் எக்லென்ஸியம் கிம்பரேடாரம் விட்டேயி (லைவ்ஸ் ஆப் அவுட்ஸ்டேன்டிங் ஜென்ரல்ஸ்) என்ற நூலை வெளியிட்டார். மிக நீளமான வாழ்க்கை வரலாறான "பாரலல் லைவ்ஸ்" புளுடார்ச் என்பவரால் கிரேக்க மொழியில் எழுதி கி.பி.80-ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற கிரேக்கர்களைப் புகழ்பெற்ற ரோமானியர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு பேச்சாளர் டீமாஸ்தீனன் மற்றும் சீசரோ அல்லது தி கிரேட் அலெக்ஸாண்டர் மற்றும் கீலியஸ் சீசர் மற்றுமொரு பழமையான வாழ்க்கை வரலாறு "டீ விட்டா சீசரம்" சியுடோனியசால் கி.பி. 121-ல் அரசர் காட்ரியன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
முந்தைய இடைக்காலத்தில் (கி.பி.400 - 1450) ஐரோப்பாவில் நாகாிகத்தைப் பற்றிய விழிப்புணர்வு குறைந்தது. அந்தச் சமயத்தில் ஒரே ஓர் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தது. ரோமானிய கத்தோலிக்க தேவாலயத் துறவிகள், மதகுருமார்கள் இக்காலத்தை வாழ்க்கை வரலாறு எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுடைய படைப்புகள் மக்களிடையே அகத்தூண்டலை உண்டுபண்ணுவதாகவும் மதமாற்றத்திற்கான ஊடகமாகவும் திகழ்ந்தன. இக்காலகட்டத்தின் வாழ்க்கை வரலாற்றின் மிக முக்கியமான உதாரணமாக உள்ளது. எயின்கார்ட் எழுதிய "சார்ல்மாங்கி்ன் வாழ்க்கை" இடைக்கால இசுலாமிய நாகரீகம் (கி.பி.750 - 1258) இக்காலத்தில் முகமது மற்றும் முக்கியமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. மற்ற படைப்புகளைக் காட்டிலும் இவ்வகை வாழ்க்கை வரலாறுகள் அதிக சமூகச் செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முந்தைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கையில் கவனம் செலுத்தின.
அமொிக்க பயோகிராஃபி எழுதும் முறை ஆங்கில முறையை ஒத்திருக்கிறது. இந்த முறை தாமஸ் கார்லியின் கருத்தான வாழ்க்கை வரலாறு என்பது வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்ற கருத்தை ஒருங்கினைத்து இருக்கிறது. சமுதாயத்தைப் புாிந்துகொள்ள சிறந்த மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு மிக அவசியமானது என்று கார்லி வலியுறுத்தினார்.


ஆராய்ச்சி நூல்கள்

இலக்கியங்களின் கருத்துகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், காலங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்றவற்றை வெளியிடும் முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்றனவும் ஆராய்ச்சி நூல்களாகும். வையாபுரிப் பிள்ளை அவர்களின் காவிய காலம், இலக்கிய தீபம், இலக்கிய மணிமாலை, தமிழ்ச் சுடர்மணிகள் போன்றன இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும்.
இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆண்டுதோறும் கருத்தரங்கக் கட்டுரைகளை நூலாக்கம் செய்து வெளியிடுகின்றது. இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இன்ன பிற நிறுவனங்களின் கருத்தரங்குகளும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் சிறந்து விளங்குகின்றன.


விளக்க நூல்கள்

செய்யுள் நூல்களுக்கு விளக்கம் அளித்தல், ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பல கோணங்களில் அணுகுதல், பல கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உரைத்தல் ஆகியன இவ்வகை நூல்களின் இயல்பாகும்.
திரு.வி.கலியாணசுந்தரனாரின் சைவத்தின் சாரம், முருகன் அல்லது அழகு, திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இராமலிங்க சுவாமிகளின் திருவுள்ளம் போன்றன இவ்வகை நூல்களாகும்.


பயண இலக்கிய நூல்கள்

பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது தாம் கண்டவைகளை, கேட்டவைகளை, பட்டறிவை ஓவியமாக, பாடலாக படைத்தார்கள். இம்முயற்சிகள் படிப்படியாக செம்மைபெற்று பயண இலக்கியமாக வடிவம் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் எந்த கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தது என்பது அறுதியிட்டுக் கூற முடியாத செய்தியாகும். வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்த பயண அனுபவங்களைச் சுவையுடன் எழுதுதல் இவ்வகை நூல்களின் இயல்பாகும். கற்போர், அப்பயணத்தைத் தாமே அனுபவித்தாற் போன்ற மகிழ்வையும் அனுபவத்தையும் பொது அறிவையும் பெறுதல் இதன் பயனாகும்.
பயண இலக்கியம் என்ற துறை தமிழுக்கு புதியது அன்று. பயண இலக்கியம் என்ற பெயரில்லை ஆனால் வேறு பெயர்களில், தமிழ் மொழியில் சில நூல்கள் உள்ளன. ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகியவற்றை இவ்வகைப்பாட்டில் அடக்கலாம். பயணம், சுற்றுலா, செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன பயணம் என்னும் பொருளை உள்ளடக்கிய சொற்களே ஆகும். தமிழ் மொழி அகராதி, செலவு என்ற சொல்லுக்கு உத்தரவு, செலவிடுதல், பயணம், பெருங்காப்பிய உறுப்புகளுள் ஒன்று, போக்கு, போதல், முடிவு, வழி என்று பொருள் தருகிறது.
பயண இலக்கியத்தின் நோக்கம் என்வென்றால் நிலப்படங்களும் நிலப்பட வரைவியலும் இல்லாத அக்காலத்தில் பயணிகள் பாதை கண்டறிவதும் அதன் வழி செல்வதும் அவர்களுக்கு பெரும் இடையூறு தரும் செயல்களாகவே அமைந்தன. எனினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே அவர்கள் சென்று வந்து, அந்த அறிவை தமக்குப் பின்பு வருவோர் பயன்படுமாறு பயண இலக்கியம் படைத்தனர்.
19, 20 நூற்றாண்டுகளை பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். கி.பி. 1988 முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஜான் மர்டாக் என்பவர் தமிழில் வெளியான நூல்களை எல்லாம் பல்வேறு வகைப்படுத்திப் பட்டியலிட்டார். நூல்களை வகைப்படுத்தி பட்டியலிடும் முறைக்கு இவரே தந்தை எனலாம். பயண நூல் பட்டியலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பயண இலக்கியம் பற்றிய முழுமையான சித்திரிப்பை நம்மால் பெற இயலும்.
19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமின்றி இந்திய இலக்கிய உலகிலும் புதிய திசைகளைத் தேடிய நேரம். இந்திய விடுதலை இயக்கம் தமிழ் நாட்டில் காந்திய வழியில் போராடிய நேரம். ஜேம்ஸ் ஆகுஸ்டுஸ் ஹிக்கி வங்காளத்தில் புதிய அச்சு இயந்திரத்தை இந்தியருக்கு அறிமுகப்படுத்தினார். நவீன அச்சு இயந்திரத்தின் வரவால் புத்தகங்கள் கிடைப்பது எளிதானது. புத்தகங்களின் வரவால் மேலை, கீழை நாட்டு இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. படித்த நடுதர வர்கம் என்று சமூகத்தில் ஒரு புதிய வகை மக்கள் தோன்றினார். கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என்று ஒவ்வொரு துறையிலும் புதிய திசையை கண்டறிவது அவசியம் ஆனது. புதிய இலக்கிய வகை அறிமுகம் அனைத்து மொழிகளுக்கும் கிடைத்தது.


புகழ்பெற்ற பயண இலக்கியங்கள்:
  • உலகம் சுற்றும் தமிழன் - அ. க. செட்டியார்
  • பிரயாண நினைவுகள் - அ. க. செட்டியார்
  • கனடா முதல் கரிபியன் வரை - அ. க. செட்டியார்
  • மகாத்துமாவின் அடிச்சுவட்டில் - அ. க. செட்டியார்
  • எனது பிரயாண நினைவுகள் - சோமலே
  • பிரிட்டனில்... - நெ. து. சுந்தரவடிவேலு
  • புதிய ஜெர்மனியில் - நெ. து. சுந்தரவடிவேலு
  • சோவியத் நாட்டில் - நெ. து. சுந்தரவடிவேலு
  • சோவியத் மக்களோடு - நெ. து. சுந்தரவடிவேலு
  • உலகத் தமிழ் - நெ. து. சுந்தரவடிவேலு
  • இதயம் பேசுகிறது (தொகுதிகள்) - மணியன்
  • அலைகடலுக்கு அப்பால் - சாரதா நம்பியாரூரான்
  • நவகாளி யாத்திரை - சாவி
  • வடுகபட்டி முதல் வால்கா வரை - வைரமுத்து
  • கொய்ரோவில் - வா. மு. சேதுராமன்
  • நூலக நாட்டில் நூற்றியிருபது நாட்கள் - அ. திருமலைமுத்துசுவாமி
  • வேங்கடம் முதல் குமரி வரை - 4 பாகங்கள் - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
  • வேங்கடத்திற்கு அப்பால்.. - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
  • தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்

புதினம்

புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத சஞ்சிகைகளில் தொடராக வெளிவருவதும் உண்டு. நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கிய வடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கிய வகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது

மேல்நாட்டவர் தொடர்பால் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வகைதான் புதினமாகும். ஒருவருடைய வாழ்வைக் கூறக்கூடியது தான் நாவல் ஆகும். புதினங்களை நாவல்கள் என்றும் நவீனம் என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் நாவல்கள் என்றே அழைத்தனர். பிற்காலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து புதினம் என அழைத்தனர்.

பொதுமக்கள் படிக்கும் இலக்கிய வகையாக நாவல் இருக்க வேண்டும். இதுவே ஆரம்ப நாவலின் கருத்தாகும். நாவல் என்ற இலக்கியமானது முதன்முதலில் இத்தாலியில் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது.

வரலாறு:

நாவல் என்னும் சொல் புதுமை என்ற பொருளைத் தரவல்லது. இச்சொல் 'Novela' என்னும் இத்தாலியச் மொழியிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நாவல் என்னும் சொல் ஆங்கில மொழியில் வழக்காட்சியுற்று நிலைபெற்று வந்துள்ளது. கொலம்பியக் கலைக்களஞ்சிய நூல் (The Colombia Encyclopedia), இதற்கு 'உரைநடையால் அமைந்த நெடிய கதை' என விளக்கம் அளிக்கிறது. வெப்ஸ்டரின் அகரமுதலியானது (Webster's New 20th Century Dictionary), நாவல் என்பதற்கு, மனித உணர்ச்சிகள், எண்ணங்கள் அவர்தம் செயல்கள் ஆகியவற்றை விளக்கி எடுத்துரைக்கின்ற, உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்று விரிவாக விளக்கமளித்துள்ளது. இத்தாலி நாட்டில் தோன்றிய நாவல் இலக்கியம் தொடக்கத்தில் காதல் நிகழ்வுகளைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தது. பின், இயற்கையாக நடக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளவாறு சித்திரிப்பதால் புனைகதை என்னும் பொருளில் கையாளப்பட்டது. தமிழில் நாவலை புதினம் என்று வழங்கிவரும் போக்கு நிலவுகிறது

1) பிரதாப முதலியார் சரித்திரம்-1876-மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம்-1896-இராஜமய்யர்
3) பத்மாவதி சரித்திரம்-1898-அ.மாதவையா

இம்மூன்று புதினங்களும் சமூக நோக்கு, பெண்ணின் சிறப்புகள், நகைச்சுவை நடை, புதினத்தைச் சரித்திரம் எனக் கொள்ளல் ஆகிய பொதுப்பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றன. இவற்றுள் புதின உத்திகள் கொண்டு விளங்குவது கமலாம்பாள் சரித்திரம் ஆகும். தொடர்ந்து, குருசாமி சர்மாவின் பிரேமகலாவத்யம் பெண்கல்வி மறுப்பையும், நடேச சாஸ்திரியின் தீனதயாளு, திக்கற்ற இரு குழந்தைகள் ஆகியவை பால்யவிவாகத்தையும், அ.மாதவையாவின் விஜய மார்த்தாண்டன் மறவர் மற்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம் குறித்தும் முத்துமீனாட்சி(1903) கைம்மைக் கொடுமையையும், வில்லியம் பொன்னுசாமியின் கமலாக்ஷி மற்றும் சிவகுமரன் சமுதாயப் பார்வையும் கொண்ட புதினங்களாக இருந்து வருகின்றன.

மேலும் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் தரைசாமி ஐயங்கார் ஆகியோர் மேனாட்டு நாவல்களைத் தழுவித் தமிழில் புதினங்கள் பல எழுதியுள்ளனர்.

புதினத்தின் வகைகள்

கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்டக் கூடியது. புதினமானது பல்வேறு கட்டமைப்புக்களை உள்ளடக்கக் கூடியது.



  • சமுதாயப் புதினங்கள்
  • வரலாற்றுப் புதினங்கள்
  • வட்டார புதினங்கள்
  • மொழிபெயர்ப்புப் புதினங்கள்
  • அரசியல் புதினங்கள்
  • தழுவல் புதினங்கள்
  • உளவியல் புதினங்கள்
  • நனவோடை புதினங்கள்

துப்பறியும் புதினங்கள்(1910)

ஆங்கில மொழிப் புலமை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தைத் தழுவி பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்தனர். அவர்களுள் சிலர் பின்வருமாறு:

  • ஆரணி குப்புசாமி முதலியார்(1867-1925): ஆங்கிலத்தில் வெளிவந்த பல புதினங்களைத் தழுவி இவர், தமிழ்மொழிச் சூழலுக்கேற்ப சுமார் எழுபத்தைந்து துப்பறியும் புதினங்களைப் படைத்தார். அவற்றுள் இரத்தினபுரி ரகசியம்(ஒன்பது பாகங்கள்), தபால் கொள்ளைக்காரன், மஞ்சள் அறையின் மர்மம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

  • வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்(1880-1942): இவர் மேனகா, கும்பகோணம் வக்கீல், பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் முதலான புதினங்களை எழுதியுள்ளார்.

  • ஜே.ஆர்.ரங்கராஜூ(1875-1956): துப்பறியும் கோவிந்தன், சந்திரகாந்தா, இராஜாம்பாள், மோகனசுந்தரம் போன்ற புதினங்கள் இவருடையதாகும்.

  • வை.மு.கோதைநாயகி அம்மாள்(1901-1960): இவர் கிழக்கு வெளுத்தது, புனித பவனம், தைரிய லட்சுமி முதலிய புதினங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய மொத்த புதினங்களின் எண்ணிக்கை நூற்றுப் பதினைந்து ஆகும்.

மேலும்,தேவன், தமிழ்வாணன், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் முதலானோர் பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்துள்ளனர்.



சமுதாயப் புதினங்கள்

சமுதாய வாழ்வியல் சூழலையும், சமூகச் சிக்கல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் புதினங்கள் சமுதாயப் புதினங்களாகும்.

  • கே.எஸ்.வெங்கடரமணி: இவரால் எழுதப்பட்ட முருகன் ஓர் உழவன்(1928), கந்தன் ஒரு தேசபக்தன்(1938) ஆகிய புதினங்கள் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் தேசப்பற்றையும் அடிப்படைகளாகக் கொண்டிருந்தன.

  • 'கல்கி'ரா.கிருஷ்ணமூர்த்தி(1899-1954): இவர் எழுதிய தியாகபூமி, கள்வனின் காதலி, மகுடபதி, அலை ஒசை முதலான புதினங்கள் சாதிக் கொடுமை, விதவைக் கொடுமை, பொருந்தாமணம், விடுதலை வேட்கை ஆகியவற்றை எடுத்துரைத்தன.

  • நாரணதுரைக் கண்ணன்: 1942-இல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு தியாகத் தழும்பு என்னும் புதினத்தை இவர் உருவாக்கினார். தரங்கிணி, கோகிலா, நடுத்தெரு நாராயணன் ஆகிய புதினங்களும் இவருடையதாகும்.

  • ர.சு.நல்லபெருமாள்: இவர் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் புதினம் நாட்டு விடுதலையில் பெண்களின் ஈடுபாடு குறித்து பேசப்பட்டிருந்தது.

  • ராஜம் கிருஷ்ணன்:இவர் எழுதிய வளைக்கரம் கோவாவின் விடுதலைப் போராட்டத்தைச் சித்திரித்தது. குறிஞ்சித்தேன், கூட்டுக் குஞ்சுகள், கரிப்பு மணிகள், வேருக்கு நீர், அலைவாய்க் கரையில் முதலான புதினங்களையும் இவர் படைத்துள்ளார்.

  • அகிலன்: பெண், எங்கே போகிறோம்?, நெஞ்சின் அலைகள், வேங்கையின் மைந்தன், சித்திரப்பாவை முதலான சமுதாய புதினங்களை இவர் எழுதியிருக்கிறார்.

இதுதவிர, வ.ரா.வின் சுந்தரி, கோதைத்தீவு, பி.எஸ்.ராமையாவின் பிரேம ஹாரம், ஆர்வியின் அணையா விளக்கு, மு.வ.வின் நெஞ்சில் ஒரு முள், அல்லி, அகல்விளக்கு, கரித்துண்டு, விந்தனின் பாலும் பாவையும், டி.கே.சீனிவாசனின் ஆடும் மாடும், சிதம்பர சுப்பிரமணியத்தின் இதயநாதம், க.நா.சு.வின் பொய்த்தேவு, எம்.வி.வெங்கடராமின் காதுகள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ரகுநாதனின் பஞ்சும் பசியும், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன்விலங்கு, சமுதாய வீதி, டி.செல்வராஜின் மலரும் சருகும், நீல.பத்மநாபனின் தலைமுறைகள், த.ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், பாரிஸுக்குப் போ, சி.என்.அண்ணாதுரையின் பார்வதி பி.ஏ., ரங்கோன் ராதா, ஜெகசிற்பியனின் கிளிஞ்சல் கோபுரம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, பொன்னீலனின் புதிய தரிசனங்கள், மறுபக்கம், அசோகமித்திரனின் தண்ணீர், அப்பாவின் சிநேகிதர், தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி, எழுத்தாளர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின் புனிதம் தேடும் புதினம் உமா சந்திரனின் முள்ளும் மலரும், சா.கந்தசாமியின் விசாரணை கமிஷன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், ஜெயமோகனின் ரப்பர், அன்வர் பாலசிங்கத்தின் செந்நீர் முதலான சமுதாய புதினங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.




வரலாற்றுப் புதினங்கள்

பண்டைத் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுப் புதினங்கள் எழுதப்படுகின்றன. அந்த வகையில் கல்கி, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகியவற்றையும், அகிலன், மணிபல்லவம், கயல்விழி, வேங்கையின் மைந்தன், வெற்றித் திருநகர் ஆகிய புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யனின் யவன ராணி, கடல் புறா, ராஜபேரிகை போன்றவையும் கோவி. மணிசேகரனின் அக்கினிக் கோவம், பீலிவளை, செம்பியன் செல்வி, அஜாத சத்ரு முதலானவையும் குறிப்பிடத்தகுந்தவை. இதுபோல், மு.மேத்தாவின் சோழநிலா, கலைஞர் கருணாநிதியின் ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், பூவண்ணனின் காந்தளூர்ச் சாலை, விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி, ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை, ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை,நந்திவர்மன் காதலி,திருச்சிற்றம்பலம் ஆகியவையும் அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி முதலானவை வரலாற்றுப் புதினங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.




வட்டார புதினங்கள்

வட்டார புதினம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் களமாகக்கொண்டு,அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டும் குறிக்கோளுடன் எழுதப்படுவதாகும்.வட்டார புதினம் எழுதும் வழக்கை வேங்கடரமணி தோற்றுவித்தார். சில வட்டார புதினங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவையாவன: மண்ணாசை-சங்கர்ராம் நாகம்மாள்,அறுவடை-ஆர்.சண்முக சுந்தரம் தங்கச் சம்பா-பூவை.எஸ்.ஆறுமுகம் மானாவாரி மனிதர்கள்-சூரியகாந்தன் ஏறுவெயில்-பெருமாள் முருகன் செந்நெல்-சோலை சுந்தர பெருமாள் தேரி மணல்-முகிலை இராசபாண்டியன் சாயத்திரை-சுப்ரபாரதிமணியன்


மொழிபெயர்ப்புப் புதினங்கள்

தமிழில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்,லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும்,விக்டர் ஹியூகோவின் ஏழைபடும் பாடு,தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன்,தோட்டியின் மகன்,காண்டேகர் மற்றும் தாகூர் புதினங்கள் பல மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.இப்பணியை கா.ஶ்ரீ.ஶ்ரீ.,த.நா.சேனாபதி,சிற்பி பாலசுப்பிரமணியம்,தமிழ்நாடன்,சுந்தர ராமசாமி முதலானோர் ஈடுபட்டனர்.


அரசியல் புதினங்கள்

நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளை மையமாக வைத்து விருப்பு வெறுப்பில்லாமல் அரசியல் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நாரண.துரைக்கண்ணனின் சீமான் சுயநலம்,நா.பார்த்தசாரதியின் நெஞ்சக்கனல்,வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர்,பெருமாள்முருகனின் மாதொருபாகன் போன்றவை அரசியல் புதினங்களுக்கு உதாரணங்களாகும்.


தழுவல் புதினங்கள்

அயல்நாட்டுப் புதினக் கதையைத் தமிழ்நாட்டுச் சூழலுக்கேற்பத் தழுவி எழுதுவதாகும்.மறைமலையடிகளின் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி,எஸ்.எஸ்.மாரிசாமியின் அநாதை ஆனந்தன்போன்ற புதினங்கள் தழுவி எழுதப்பட்ட புதினங்கள் ஆகும்.


உளவியல் புதினங்கள்

இருபாலரின் உளவியல் சிக்கல்கள் குறித்து இவை எடுத்துரைக்கின்றன.காட்டாக, தி.ஜானகிராமனின் மோக முள், அம்மா வந்தாள், கோவி.மணிசேகரனின் தென்னங்கீற்று, ஜெயகாந்தனின் ரிஷிமூலம், முதலானவற்றைக் கூறவியலும்.


நனவோடை புதினங்கள்

நனவோடை என்பது ஓர் உத்தியாகும். நனவோட்டத்தின் வழியே கதை கூறுதலாகும்.அசுர கணம்(க.நா.சு), ஜீவனாம்சம் (சி.சு.செல்லப்பா), அபிதா, புத்ர (லா.ச.ரா.) முதலியன நனவோடை புதினங்கள் ஆகும்.



புதின அமைப்பு

கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்டக் கூடியது. புதினமானது பல்வேறு கட்டமைப்புக்களை உள்ளடக்கக் கூடியது. அவையாவன,

  • கதைக்களம்.
  • கதைக்கரு.
  • கருப்பொருள்.
  • கதையும் கதைப் பின்னலும்.